அடி மேல் அடி வாங்கும் காசா.. திடீர் துப்பாக்கி சூடு.. திரும்பும் திசையெல்லாம் மரண ஓலம்..!
காசாவில் நிவாரண பொருட்கள் வாங்கச் சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் 1,139 இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்ட நிலையில் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான பிரச்சனை போராக மாறியது. இந்த சம்பவத்திற்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வரும் இந்த போரில், காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும் போர் விமானங்களும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.
காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கைக்கு இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காசாவுக்கு மற்ற நாடுகள் அனுப்பும் உதவிகளை இஸ்ரேல் தடுத்து வருவதால் அங்கு பசி, பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது கிடைக்கும் உணவுப்பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. உதாரணத்திற்கு இந்தியாவில் மலிவு விலையில் 5 ரூபாய்க்கு கிடைக்கும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட், போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் அசல் விலையை விட 500 மடங்கு அதாவது ரூ.2400க்கு விற்கப்படுகிறது. இந்த விலைவாசி உயர்வால் காசா மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஹமாஸ் தலைவரை போட்டுத்தள்ளியது இப்படித்தான்! ஸ்கெட்ச் போட்டதை விவரிக்கும் இஸ்ரேல்..!
மேலும் தொடர்ந்து நடந்து வரும் போரால் காசா முனையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. காசாவுக்கு பல்வேறு நாடுகள் நிவாரண பொருட்கள் அனுப்பி வரும் நிலையில், அவற்றை அமெரிக்க தொண்டு நிறுவனம் காசாவில் விநியோகித்து வருகிறது.
இந்நிலையில், காசாவின் ரபாவில் நேற்று நிவாரண பொருட்கள் விநியோகிக்கப்பட்டபோது, அங்கு ஏராளமான பாலஸ்தீனியர்கள் குவித்தனர். அப்போது, மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் முதற்கட்டமாக 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
நிவாரண பொருட்களை கொள்ளையடிக்க கொள்ளை கும்பல்களும் காசாவில் செயல்பட்டு வரும் நிலையில், இந்த துப்பாக்கி சூடு நடத்தியது இஸ்ரேல் படையினரா? ஹமாஸ் ஆயுதக்குழுவினரா? அல்லது கொள்ளை கும்பலா? என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.
முன்னதாக சுவீடனை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க், காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக "Freedom Flotilla" என்ற கப்பல் மூலம் பயணித்தபோது, இஸ்ரேலிய கடற்படையால் கப்பல் சிறைபிடிக்கப்பட்டு, அதில் இருந்த கிரெட்டா உள்ளிட்ட 12 ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காசாவுக்குள் என்ட்ரியான கிரெட்டா.. ரவுண்டு கட்டி பிடித்த இஸ்ரேல் கடற்படை..!