×
 

இந்திய பெருங்கடலில் அமெரிக்கா அதிரடி! ஈரானின் மெஜஸ்டிக் எக்ஸ் கச்சா எண்ணெய் கப்பல் சிறைபிடிப்பு!

இந்தியப் பெருங்கடலில் ஈரானின் M/T Majestic X என்ற கச்சா எண்ணெய் கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா.

உலகளவில் ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்கக் கடற்படை இந்தியப் பெருங்கடலில் ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஈரானுக்குச் சொந்தமான M/T Majestic X என்ற பிரம்மாண்ட கச்சா எண்ணெய் கப்பலை அமெரிக்க அதிகாரிகள் அதிரடியாகச் சிறைபிடித்துள்ளனர்.

ஈரானிய கப்பல்களைக் குறிவைத்து அமெரிக்கா தனது தேடுதல் வேட்டையை சர்வதேச அளவில் விரிவுபடுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இலங்கை மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு இடைப்பட்ட இந்தியப் பெருங்கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, இந்தக் கப்பலை அமெரிக்கப் படைகள் தடுத்து நிறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம், ஹார்முஸ் நீரிணையில் ஈரான் ஏற்கனவே இரண்டு கப்பல்களைச் சிறைபிடித்ததற்குப் பதிலடியாகப் பார்க்கப்படுகிறது. இன்று காலை குஜராத் நோக்கி வந்துகொண்டிருந்த 'எப்பமினோண்டாஸ்' (Epaminondas) மற்றும் பனாமா கொடியுடன் வந்த மற்றொரு கப்பலை ஈரான் சிறைபிடித்தது. ஈரான் தனது கடல்சார் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து வரும் நிலையில், தற்போது இந்தியப் பெருங்கடலிலேயே ஈரானின் எண்ணெய் கப்பலை அமெரிக்கா சிறைபிடித்துள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அமைதி பேச்சுவார்த்தை! ஈரான் மீதான போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்தார் அதிபர் டிரம்ப்!

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் மாறி மாறி கப்பல்களைச் சிறைபிடித்து வருவதால், சர்வதேசக் கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் நிலவும் போக்குவரத்துத் தடைகள் மற்றும் இந்தச் சிறைபிடிப்புச் சம்பவங்களால் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 99 டாலர் வரை அதிகரித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் வழியாக இந்தியா போன்ற நாடுகளுக்கு வரும் எண்ணெய் விநியோகம் இதனால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்திருந்தாலும், ஈரானின் முறையற்ற வர்த்தக நடவடிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே எச்சரித்திருந்தார். அதன் ஒரு பகுதியாகவே இந்தச் சிறைபிடிப்பு நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் இந்த நேரடித் தலையீடு, பிராந்தியப் பாதுகாப்பில் புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மிரட்டலுக்கு இடமில்லை! அமெரிக்காவிற்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கடும் எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share