26/11 தாக்குதல் குற்றவாளி மசூத் அஸாருக்கு செக்! ரூ.24 லட்சமாக உயர்ந்த பரிசுத்தொகை! பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!
2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலுக்குப் பிறகு மசூத் அஸாரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து பாகிஸ்தானிடம் வலியுறுத்தி வருகிறது.
இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு எதிரான பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் நிறுவனர் மசூத் அஸார் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகையை ரூ.24 லட்சமாக பாகிஸ்தான் அரசு உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட காலமாக இந்தியா தேடி வரும் முக்கிய பயங்கரவாதிகளில் ஒருவராக மசூத் அஸார் கருதப்படுகிறார்.
மசூத் அஸார், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை உருவாக்கியவர். 2001-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தாக்குதல், 2008-ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதல், 2016-ம் ஆண்டு பதான்கோட் விமானப்படை தள தாக்குதல் மற்றும் 2019-ம் ஆண்டு புல்வாமா குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடன் அவரது அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. அவரை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.
2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலுக்குப் பிறகு மசூத் அஸாரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து பாகிஸ்தானிடம் வலியுறுத்தி வருகிறது.
இதையும் படிங்க: ஆப்கான் மருத்துவ மாணவர்களுக்கு ஷாக்!! பாகிஸ்தானில் படிப்பை தொடர தடை, வெளியேற உத்தரவு!!
ஆனால், மசூத் அஸார் தற்போது பாகிஸ்தானில் இல்லை என்றும், அவர் ஆப்கானிஸ்தானில் இருப்பதாகவும் பாகிஸ்தான் தரப்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆப்கானிஸ்தான் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, 2021-ம் ஆண்டு மசூத் அஸாரை தேடப்படும் குற்றவாளியாக பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு அறிவித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரைப் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு ரூ.17.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தத் தொகை ரூ.24 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பாகிஸ்தான் மீது தொடர்ந்து அழுத்தங்கள் இருந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக பயங்கரவாத நிதியுதவி தொடர்பான சர்வதேச கண்காணிப்பு மற்றும் பொருளாதார அழுத்தங்களை தவிர்க்கும் நோக்கில் பாகிஸ்தான் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும், மசூத் அஸார் தற்போது எங்கு இருக்கிறார் என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: பாக்., பிரதமரின் பித்தலாட்டம்? மோடி, புடின், ஜின்பிங் எங்கே? வைரலான புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை!