×
 

இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம் நீட்டிப்பு! அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், தற்போது அமலில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நேற்று (ஏப்ரல் 23, 2026) நடைபெற்ற இரண்டாவது உயர்மட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த முதற்கட்ட 10 நாள் போர் நிறுத்தம் வரும் திங்கட்கிழமையுடன் முடிவடைய இருந்தது. இரு நாடுகளின் தூதர்களுடனான பேச்சுவார்த்தை மிகவும் சிறப்பாக அமைந்ததாகத் தெரிவித்த டிரம்ப், போர் நிறுத்தத்தை மேலும் 21 நாட்களுக்கு (3 வாரங்கள்) நீட்டிக்க இருதரப்பும் சம்மதித்துள்ளதாகத் தெரிவித்தார். இந்த கூடுதல் கால அவகாசம், எல்லையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தவும், இஸ்ரேலியப் படைகளை லெபனானில் இருந்து திரும்பப் பெறவும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாஷிங்டனில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளின் தூதர்கள் நேரடியாகப் பங்கேற்றனர். அதிபர் டிரம்புடன் இணைந்து துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். லெபனான் தன்னை ஹிஸ்புல்லா அமைப்பிடமிருந்து தற்காத்துக் கொள்ள அமெரிக்கா முழு உதவியை வழங்கும் எனத் தனது 'ட்ரூத் சோஷியல்' பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது! ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவிப்பு!

இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் லெபனான் அரசு நேரடியாக ஈடுபட்டாலும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு இந்த ஒப்பந்தத்தில் அதிகாரப்பூர்வமாகச் கையெழுத்திடவில்லை. எனினும், லெபனான் எல்லைப் பகுதியில் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதை சர்வதேச நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த 3 வார காலத்திற்குள் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் லெபனான் அதிபர் ஜோசப் அவ்ன் ஆகியோர் வெள்ளை மாளிகையில் நேருக்கு நேர் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள் போர் நிறுத்தம்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share