நிலாவில் நிரந்த ஆய்வு தளம்!! நாசா மும்முரம்! மூன்று கட்டங்களை கொண்ட நச் திட்டம்!
நிலவில் மனிதர்களை குடியேற்றுவதற்கான ஆய்வுக்கு நிரந்தர தளம் அமைக்கும் மூன்று கட்ட திட்டத்தை நாசா அறிவித்துள்ளது.
நிலவில் மனிதர்களை நிரந்தரமாக குடியேற்றும் முயற்சியில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா மிகப்பெரிய திட்டத்தை அறிவித்துள்ளது. நிலவில் நிரந்தர ஆய்வு தளம் அமைக்கும் இந்த திட்டம் உலக விண்வெளி வரலாற்றில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நாசாவின் ஆர்ட்டெமிஸ்-2 திட்டத்தின் கீழ் நான்கு விண்வெளி வீரர்கள் நிலவை சுற்றிவந்தனர். 54 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்கள் மீண்டும் நிலவை நெருங்கிச் சென்ற இந்த பயணம் உலகளவில் கவனம் பெற்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது நிலவின் மேற்பரப்பில் நிரந்தர ஆய்வு மையம் அமைக்கும் மூன்று கட்ட திட்டத்தை நாசா வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக சுமார் 1.70 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. நிலவின் கடுமையான சூழலில் மனிதர்கள் நீண்ட காலம் வாழ முடியுமா என்பதை ஆய்வு செய்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காக ரோவர்கள், ட்ரோன்கள் மற்றும் பல்வேறு நவீன கருவிகள் நிலவுக்கு அனுப்பப்பட உள்ளன.
இதையும் படிங்க: இயற்கை எழுதிய உங்கள் பெயர்!! நாசாவின் புதிய வசதி! 'Your Name in Landsat'.! புது ட்ரெண்ட்!
ரோவர்கள் என்பது கேமரா, சென்சார் மற்றும் கற்கள், மணல் போன்றவற்றை சேகரிக்கும் இயந்திர கைகள் பொருத்தப்பட்ட சிறப்பு வாகனங்கள் ஆகும். ட்ரோன்கள் மூலம் நிலவின் மேற்பரப்பை விரிவாக ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருவிகள் மனிதர்கள் வருவதற்கு முன்பே அங்குள்ள சூழலை ஆராய உதவும் என நாசா தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் குறித்து நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் கூறுகையில், “அமெரிக்கா மீண்டும் நிலவுக்கு திரும்புகிறது. மனிதகுலத்தின் முதல் நிரந்தர வெளி உலக ஆய்வு தளம் நிலவில் உருவாக உள்ளது. 2028-ஆம் ஆண்டுக்குள் விண்வெளி வீரர்களை நிலவில் இறக்குவது எங்கள் இலக்கு” என்றார்.
மேலும், இந்த ஆண்டிலேயே மூன்று விண்கலன்களை அனுப்பி புதிய தொழில்நுட்பங்களை சோதனை செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மனிதர்கள் செவ்வாய்க்கு செல்லும் எதிர்கால திட்டங்களுக்கும் இந்த நிலா ஆய்வு மையம் முக்கிய அடித்தளமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: எபோலோ வைரசால் நொறுங்கிப்போன ஆப்ரிக்கா! காங்கோவுக்கு மருந்துகள் அனுப்பி உதவிக்கரம் நீட்டிய இந்தியா!