×
 

நேபாளத்துக்கு அடுத்த பேராபத்து? இன்னும் 72 மணி நேரம்தான்! சீனா வெளியிட்ட பகீர் எச்சரிக்கை!

நீரின் அழுத்தம் அதிகரித்து ஏரி உடைந்தால், கீழ்ப்பகுதிகளில் மீண்டும் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

காத்மாண்டு: கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு, அடுத்த 72 மணி நேரத்தில் மற்றொரு வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சீனா எச்சரித்துள்ளது. திபெத் பகுதியில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் ஒரு ஏரி உடையும் பட்சத்தில் மீண்டும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திபெத்தில் உள்ள பிரமாண்ட பனிப்பாறை உருகியதைத் தொடர்ந்து அங்குள்ள ஏரியில் உடைப்பு ஏற்பட்டு, அதிகளவு தண்ணீர் நேபாளத்தின் கோஷி நதியில் கலந்ததாக கூறப்படுகிறது. இதனால் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வழியில் இருந்த பாலங்கள், சாலைகள், கட்டடங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.

இந்த பேரிடரில் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேபாள ராணுவத்தினர் உள்ளிட்ட மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நிம்மதி செய்தி! நேபாளத்தில் சிக்கிய 20 தமிழர்கள் பத்திரமாக மீட்பு! பெயர் பட்டியல் வெளியீடு! முழு விவரம்!

இந்த நிலையில், நேபாளத்திற்கு மேலும் ஒரு ஆபத்து இருப்பதாக சீனா எச்சரித்துள்ளது. தற்போதைய வெள்ளப்பெருக்குக்கு காரணமான பனிப்பாறை உருகிய பகுதிக்கு அருகே, திபெத்தில் சோசென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள ஏரி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணிகளுக்கு உதவுவதுடன், மற்றொரு பேரிடர் ஏற்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்கள் கூறியுள்ளனர். ஆகஸ்ட் 27 நிலவரப்படி, சுமார் 20 லட்சம் கன மீட்டர் தண்ணீரை கொள்ளளவாக கொண்ட அந்த ஏரி நிரம்பி வழியும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று நாட்களில் அந்த ஏரியில் மேலும் சுமார் 30 லட்சம் கன மீட்டர் தண்ணீர் தேங்கக்கூடும் என சீன அதிகாரிகள் கணித்துள்ளனர். நீரின் அழுத்தம் அதிகரித்து ஏரி உடைந்தால், கீழ்ப்பகுதிகளில் மீண்டும் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால், நேபாளத்தில் ஏற்கனவே பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தின் பாதிப்புகளில் இருந்து மக்கள் மீள்வதற்குள் மற்றொரு இயற்கை பேரிடர் ஏற்படுமா என்ற அச்சம் உருவாகியுள்ளது. ஏரியின் நீர்மட்டம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை சீன அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையே, நேபாளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காணாமல் போனவர்களை கண்டறியும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய சூழலில், திபெத் பகுதியில் உள்ள ஏரியின் நிலை மற்றும் அடுத்த சில நாட்களில் ஏற்படும் நீர்வரத்து மாற்றங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
 

இதையும் படிங்க: நேபாள வெள்ளத்தில் சிக்கிய புதுச்சேரி குடும்பத்தினர்! அரசு உடனே மீட்க வேண்டும் என மகன் கண்ணீர் கோரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share