உலகையே உலுக்கிய கோரம்... நேபாளம் பெரு வெள்ளத்திற்கு காரணம் இதுவா?... வெளியானது அதிர்ச்சி தகவல்...!!
நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பனிப்பாறை சரிந்து பெருவெள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அதற்கு மாறான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கனமழை இல்லை. ஆனால், பெருவெள்ளம். பனிப்பாறைகள் சரிந்ததால் வெள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், பனிப்பாறைகள் சரிந்தது எப்படி? நிலநடுக்கம் ஏற்பட்டதா? என நேபாள வெள்ளத்துக்குப் பின்னால் பல்வேறு கேள்விகள் சுழன்று வருகின்றன.
இமயமலையின் உயரமான பகுதியில் இருந்து பெரிய பனிப்பாறை சரிந்து விழுந்ததே பெருவெள்ளத்துக்கான காரணமாகக் கூறப்படுகிறது. பனிப்பாறை சுமார் 5,200 மீட்டர் உயரத்திலிருந்து 1,200 மீட்டர் கீழே லெண்டே கோலா நீர்நிலைக்குள் விழுந்துள்ளது.
அந்த வேகத்தில் கூடுதலான பாறைகள், மண், பனிக்கட்டிகள் மற்றும் நீர் ஆகியவை சேர்ந்து அதிக அளவில் பெருக்கெடுத்து வெள்ளமாகச் சென்றுள்ளது. ஒரு கட்டத்தில் இவை ஆற்றைக் கடக்கும்போது, நீரின் அழுத்தத்தால் வெடிப்பு ஏற்பட்டு, போதகோஷி மற்றும் திரிசூலி ஆறுகளின் வழியாக கீழ்நோக்கி வெள்ளம் பாய்ந்து, சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரப் பகுதிகளைத் தாக்கியுள்ளது.
இதையும் படிங்க: சேலையில் கட்டி... ஹாலிவுட்டையே மிஞ்சிய திகில் சம்பவம்... நேபாளத்தில் இருந்து தப்பி வந்த தமிழர்கள் ‘திக் திக்’ பேட்டி...!
குறிப்பாக, ஆகஸ்ட் 26ஆம் தேதி காலை 8.30 மணி அளவில் ரிக்டர் அளவுகோலில் 4.4 அளவுக்கு நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அடுத்த சில நிமிடங்களிலேயே பெருவெள்ளம் தாக்கியுள்ளது.
இதனால், நிலநடுக்கம் ஏற்பட்டதால் பனிப்பாறை சரிந்து பெருவெள்ளம் ஏற்பட்டதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பனிப்பாறை விழுந்த தாக்கம் காரணமாகவே நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
நில அதிர்வு என்பது நிலநடுக்கத்தைத் தாண்டி, எரிமலை வெடிப்பு, நிலச்சரிவு, குண்டுவெடிப்பு உள்ளிட்ட நிகழ்வுகளாலும் உணரப்படுகின்றன.
இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை, சரிந்து விழுந்த பனிப்பாறை மற்றும் பாறைகளின் அளவு மிகப்பெரியதாகவும், அவை வேகமாக நகர்ந்ததாலும், நிலநடுக்கத்தால் உருவாகும் நில அதிர்வுக்கு நிகரான அதிர்வு அலைகள் உருவாகியுள்ளன.
அதே சமயத்தில், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் பனிப்பாறை சரிவை முன்பே தெரிந்துகொள்ள முடியாதா என்ற கேள்வியும் எழுகிறது.
செங்குத்தான ஒரு பனிப்பாறை பல ஆண்டுகளாக நிலையாக இருந்தாலும், ஒரு பனிப்பாறை எப்போது சரிந்து விழும் என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடியாது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
செயற்கைக்கோள்களின் மூலம் பனிப்பாறைகளின் பரப்பளவு, நகர்வு, உயரம், பனிப்படலம் மற்றும் பனிப்பாறை ஏரிகளின் வளர்ச்சி ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க முடியும். ஆனால், அவற்றில் ஏற்படும் மாற்றங்களை மட்டுமே கண்டறிய முடியுமே தவிர, திடீரென ஏற்படும் பனிப்பாறை சரிவை முன்கூட்டியே கணிக்க முடியாது.
நேபாளத்தில் ஏற்பட்ட இந்த இயற்கைப் பேரிடர், வரலாற்றில் ஆறாத வடுவாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: நேபாள மீட்பு பணிகள்! வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு!