டிரம்பின் 15 அம்சத் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு! காஸாவில் போர் நிறுத்தம் எப்போது?
காஸாவுக்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த 15 அம்சத் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
காஸா விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடியாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளார். காஸாவில் ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்களை முழுமையாக நிராயுதபாணியாக்குவது தொடர்பாகக் கடந்த மாதம் உடன்பாடு எட்டப்பட்டதாக டிரம்பின் அமைதிக் குழு தெரிவித்திருந்தது. இருப்பினும், இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள இஸ்ரேல் மறுத்துள்ளது.
ஹமாஸ் அமைப்பு தனது ஆயுதங்களை உண்மையாகவும் முழுமையாகவும் கைவிடும் வரை, காஸாவிலிருந்து இஸ்ரேல் ராணுவத்தைத் திரும்பப் பெறும் நடவடிக்கை இருக்காது என நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தனது அனைத்து வகையான தாக்குதல்களையும் நிறுத்தி, காஸாவில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே கனரக ஆயுதங்களை ஒப்படைக்க முடியும் என ஹமாஸ் கூறியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் காஸாவில் ஆரம்பகட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்ட பிறகும், அந்தப் பகுதியில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: திடீர் போன் கால்! மேற்காசியாவில் பரபரப்பு! பிரதமர் மோடியுடன் நெதன்யாகு நடத்திய முக்கிய ஆலோசனை!
இதனிடையே, அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தைக் கைவிட்டு ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா தனது பொருளாதாரத் தடைகளை முழுமையாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பதிலாக, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் திறக்க முன்வர வேண்டும் என நிபந்தனை விதிக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.
டிரம்பின் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இதையும் படிங்க: ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால் மிகப்பெரிய தாக்குதல்... டிரம்ப் கடும் எச்சரிக்கை; நெதன்யாகுவும் அதிரடி!