வடகொரியாவின் அதிரடி சோதனை! 10 ஏவுகணைகளை ஏவி மிரட்டிய கிம் ஜான் உங்!
வடகொரியாவில் அதிபர் கிம் ஜான் உங் மேற்பார்வையில் நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய 10 பாலிஸ்டிக் ஏவுகணைகள் கிழக்கு கடற்பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் இணைந்து 'ஃப்ரீடம் ஷீல்ட்' என்ற பெயரில் பிரம்மாண்ட கூட்டு ராணுவப் பயிற்சியை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக வடகொரியா நேற்று (மார்ச் 14) தனது கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஒரே நேரத்தில் சுமார் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிச் சோதனை செய்துள்ளது.
சுமார் 10 ஏவுகணைகள் பியாங்யாங் அருகே உள்ள சுனான் பகுதியிலிருந்து ஏவப்பட்டன. இவை சுமார் 350 கி.மீ தூரம் வரை கடந்து சென்று கிழக்குக் கடற்பகுதியில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கின.
இந்தச் சோதனையை வடகொரிய அதிபர் கிம் ஜான் உங் தனது 13 வயது மகள் கிம் ஜூ-ஏ (Kim Ju Ae) உடன் நேரில் பார்வையிட்டார். சமீபகாலமாக முக்கிய ராணுவ நிகழ்வுகளில் கிம் தனது மகளை அழைத்து வருவது, அவர் தனது தந்தையின் அரசியல் வாரிசாக உருவெடுத்துள்ளதைக் காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: ஹிரோஷிமா குண்டை விட 20 மடங்கு பவர்! அமெரிக்கா நடத்திய 'மினிட்மேன் III' ஏவுகணை சோதனை!
இந்த ஏவுகணைகள் சிறு-தொலைவு பாலிஸ்டிக் ஏவுகணைகள் (SRBM) வகையைச் சேர்ந்தவை. குறிப்பாக, தென்கொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்துத் தாக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மார்ச் 19 வரை நடைபெறவுள்ள அமெரிக்கா-தென்கொரியக் கூட்டுப் பயிற்சியானது தங்களுக்கு எதிரான போர் ஒத்திகை என வடகொரியா தொடர்ந்து சாடி வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே இந்த ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஈரான் - இஸ்ரேல் போர் சூழலால் அமெரிக்கா தனது ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளை (THAAD) தென்கொரியாவிலிருந்து இடமாற்றம் செய்து வருவதாகக் கூறப்படும் நிலையில், வடகொரியாவின் இந்தச் சோதனை தென்கொரியாவிற்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எதிரிகளுக்கு இடமில்லை! ஹார்மூஸ் ஜலசந்தி குறித்து ஈரானின் அதிரடி திட்டவட்டம்!