×
 

மீண்டும் வெடித்தது போர்? - ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து பாகிஸ்தான் சரமாரி குண்டுவீச்சு... குழந்தைகள் பலி...!

பாகிஸ்தான் திங்கள்கிழமை நள்ளிரவு ஆப்கானிஸ்தான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது, ஒரு பெண் மற்றும் ஒன்பது குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானுக்குள் திங்கள்கிழமை இரவு கோஸ்ட் மாகாணத்தில் உள்ள ஒரு குடியிருப்பின் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 10 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தலிபான் ஆட்சி தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. திங்கள்கிழமை இரவு ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் கொடூர வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. கோஸ்ட் மாகாணத்தில் பல வீடுகள் மீது பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலில், ஒன்பது குழந்தைகள் உட்பட பத்து பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

"கடந்த 24ம் தேதி இரவு சுமார் 12 மணியளவில், கோஸ்ட் மாகாணத்தின் கோர்புஜ் மாவட்டத்தின் முகல்கை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது பாகிஸ்தான் படைகள்  சரமாரியாக குண்டுவீசின. இதன் விளைவாக, வீட்டில் இருந்த ஒன்பது குழந்தைகள் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் ஐந்து சிறுவர்கள் மற்றும் நான்கு சிறுமிகள் அடங்குவர். ஒரு பெண்ணும் கொல்லப்பட்டார். அவர்கள் வசித்து வந்த வீடு முற்றிலுமாக அழிக்கப்பட்டது” என அறிவித்துள்ளனர். இது தவிர, குனார் மற்றும் பக்திகா பகுதிகளிலும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன, மேலும் அந்தத் தாக்குதல்களில் நான்கு பொதுமக்கள் காயமடைந்தனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தணியாத பதற்றம்... பாகிஸ்தானில் கார் குண்டுவெடிப்பு..! பரபரப்பு...!

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே மீண்டும் போர் பதற்றம் உருவாவது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையே, இந்தப் பிரச்சினைக்கு ராஜதந்திர தீர்வு காண ஆப்கானிஸ்தானுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் ஸல்மே கலீல்சாத் அழைப்பு விடுத்துள்ளார். இந்தத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ள அவர், துருக்கியக் குழு விரைவில் இஸ்லாமாபாத் மற்றும் காபூலுக்குச் சென்று இரு நாடுகளுக்கும் இடையே ஒரு உடன்பாட்டை எட்ட முயற்சிக்கும் என தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானாலும், அது பெயரளவில் மட்டுமே உள்ளது. நீண்டகால அமைதி ஒப்பந்தத்திற்கான பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தான்புல்லில் தொடங்கியுள்ளது. அவை இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையில், எல்லையில் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முட்டுக்கட்டையாகவே உள்ளன. 

குறிப்பாக முந்தைய தாக்குதல்கள் குறித்து பாகிஸ்தான் வெளியிட்ட மிக முக்கிய தகவல் ஆப்கானிஸ்தானை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் மீதான ட்ரோன் தாக்குதல்களுக்குப் பின்னால் ஒரு வெளிநாட்டு சக்தி இருப்பதாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது. இருப்பினும், வெளிநாட்டு சக்தியின் பெயரை பாகிஸ்தான் வெளியிடவில்லை. அதற்கு முன், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குண்டு வெடிப்புகள் ஏற்பட்டதால் தாக்குதல்கள் தீவிரமான திருப்பத்தை அடைந்தன. தலிபான் போராளிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் எச்சரித்ததை தொடர்ந்து குண்டு வீச்சு சம்பவங்களிலும் பாகிஸ்தான் இறங்கியதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: கெத்து காட்டிய கத்தார்... தட்டித்தூக்கிய துருக்கி... பாக், ஆப்கான் மோதலுக்கு முடிவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share