பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்?! பாக்., ராணுவ தளபதி அசின் முனீர் கதறல்!
“ஆப்கானிஸ்தானை பயன்படுத்தி தங்களுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்,” என, பாகிஸ்தான் ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராவல்பிண்டியில் ஷியா முஸ்லிம் மதகுருமார்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆப்கானிஸ்தான் மண்ணை தங்களுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) பயங்கரவாத அமைப்பினர் ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் பெற்று பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்துவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. இதை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கடந்த மாதம் ‘கஜப் லில் ஹக்’ என்ற பெயரில் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கையை பாகிஸ்தான் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: நான் தான் சொன்னேன்ல.! இபிஎஸ் டெல்லி பயணம்..! முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்..!!
ஜெனரல் அசிம் முனீர் மேலும் கூறுகையில், “பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படும் அனைத்து பயங்கரவாதிகளையும், அவர்களின் உட்கட்டமைப்புகளையும் முழுமையாக அழிப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு இதை உணர்ந்து, தங்கள் மண்ணை பயங்கரவாதத்துக்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது” என்று வலியுறுத்தினார்.
இதற்கிடையே, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டும், சவுதி அரேபியா, துருக்கி, கத்தார் உள்ளிட்ட நாடுகளின் கோரிக்கையின் பேரிலும் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் தற்காலிகமாக போர் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளன. சில தினங்களுக்கு முன் காபூலில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 400 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கான் தரப்பு குற்றம் சாட்டியிருந்தது. இந்தப் பின்னணியில் இரு நாடுகளும் தற்காலிக சமாதானத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன.
எனினும், பாகிஸ்தான் ராணுவ தளபதியின் கடும் எச்சரிக்கை, எல்லைப் பதற்றம் மீண்டும் அதிகரிக்கும் அபாயத்தை சுட்டிக்காட்டுகிறது. இரு அண்டை நாடுகளுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்தால், தெற்காசியப் பிராந்தியத்தில் பாதுகாப்பு சூழல் மேலும் மோசமடையும் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: எனக்கு வேற வழி தெரியலம்மா... மகளின் தலையில் சிசிடிவி வைத்த தந்தை... வைரலாகும் வீடியோ..!!