பாக்., ஆப்கான் மோதல் உச்சக்கட்டம்! பரஸ்பர தாக்குதலால் நீடிக்கும் பதற்றம்!
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், அங்குள்ள டி.டி.பி., எனும் தெஹ்ரீக் - இ - தலிபான் பாக்., பயங்கரவாத அமைப்பின் மையங்கள் மற்றும் தலிபான் உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன.
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய தொடர் வான் தாக்குதல்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதிகள் மற்றும் கந்தஹார் மாகாணத்தில் உள்ள டி.டி.பி. (தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்) பயங்கரவாத அமைப்பின் மையங்கள் மற்றும் தலிபான் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. இது இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே டி.டி.பி. அமைப்பு காரணமாக நீண்டகால பதற்றம் நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் இந்த அமைப்பு பாகிஸ்தானில் தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்லாமாபாத் குற்றம்சாட்டுகிறது.
ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சி இதற்கு எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்து, நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான், ஆப்கான் எல்லையோரம் உள்ள டி.டி.பி. நிலைகள் மீது வான் வழி தாக்குதல்களை தொடங்கியது.
இதையும் படிங்க: ஆப்கான் தாக்குதல் எதிரொலி! அஞ்சி நடுங்கும் பாக்.,! நாடு முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை!
சமீபத்தில் பாகிஸ்தானின் ராவல்பிண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆப்கான் தரப்பிலிருந்து ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணங்கள் மற்றும் கந்தஹாரில் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்தியது.
கந்தஹாரில் உள்ள முக்கிய ராணுவ உள்கட்டமைப்புகள், தளவாட மையங்கள், சுரங்கங்கள் ஆகியவை வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது. இந்த தாக்குதல்கள் 'ஆபரேஷன் கஜாப்-உல்-ஹக்' என்ற பெயரில் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், "பாகிஸ்தான் நடத்திய குண்டுவீச்சில் பெரிய சேதம் ஏற்படவில்லை. சில இடங்களில் மட்டுமே தாக்குதல் நடந்தது" என்று கூறியுள்ளார். ஆனால், இரு தரப்பும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருவதால், எல்லைப் பகுதியில் போர் நிலை உருவாகியுள்ளது.
இந்த மோதல் தொடர்ந்தால், பிராந்தியத்தில் பெரும் அமைதியின்மை ஏற்படும் அபாயம் உள்ளது. ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இரு நாடுகளும் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லை மோதல் மேலும் தீவிரமடைந்தால், அண்டை நாடுகளான இந்தியா உள்ளிட்டவையும் பாதிக்கப்படலாம்.
இதையும் படிங்க: பாக்., இதயப்பகுதியை சுக்குநூறாக்கிய தலிபான்!! 200KM உள்ளே புகுந்து மரண அடி!! இஸ்லாமாபாத் காலி?!