மேற்கு ஆசிய நெருக்கடியும், எரிசக்தி பாதுகாப்பும்! இலங்கை ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்தவும் இரு நாட்டுத் தலைவர்களும் உறுதி!
மேற்கு ஆசியாவில் (ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையே) நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் அதன் காரணமாக உலகளாவிய எரிசக்தித் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களும் இன்று தொலைபேசி வாயிலாகத் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர். தற்போதைய இக்கட்டான சூழலில், இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் இந்த உரையாடலின் போது வலியுறுத்தினர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை குறித்துப் பிரதமர் மோடி தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுடன் உரையாடியது மகிழ்ச்சியளிப்பதாகவும், குறிப்பாக எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேற்கு ஆசியப் போரினால் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தெற்காசிய நாடுகளையும் பாதித்துள்ள நிலையில், இந்த ஆலோசனை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மேற்கு ஆசிய நெருக்கடியால் உலகளாவிய எரிசக்தித் துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து இரு தலைவர்களும் கவலை தெரிவித்தனர். இதனை எதிர்கொள்ள இந்தியா - இலங்கை இடையே ஏற்கனவே நிலுவையில் உள்ள எரிசக்தித் திட்டங்களை (குறிப்பாக திருகோணமலை எரிசக்தி மையம்) விரைவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: ஏப்ரல் 3-ல் மோடி வருகை! புதுச்சேரியில் என்டிஏ வேட்பாளர்களுக்காக பிரதமர் அதிரடி ரோடு ஷோ!
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் மற்றும் கடல்சார் வணிகப் பாதைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பிராந்திய அமைதியைப் பேண இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட உறுதி பூண்டனர்.
இந்தியாவின் அண்டை நாட்டுக்கு முன்னுரிமை கொள்கையின் கீழ், இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாகப் பிரதமர் மோடி உறுதியளித்தார். இதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
ஏற்கனவே, போர்க் கால அவசர நடவடிக்கையாக இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்கு கியூ.ஆர் குறியீடு முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் இந்த ஆதரவு இலங்கைக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இரு நாட்டுத் தலைவர்களும் வரும் காலங்களில் தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொண்டு, பொதுவான சவால்களை எதிர்கொள்ள இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஈரான் போரால் எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது..!! நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ப்ராமிஸ்..!!