மத்திய கிழக்கு போர் பதற்றம்! பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் பதற்றமான நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் எமானுவல் மேக்ரானுடன் இன்று தொலைபேசி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.
மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்து, உலக நாடுகளின் எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் சர்வதேச வர்த்தகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள சூழலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோர் இன்று தொலைபேசி வாயிலாக அவசர ஆலோசனை மேற்கொண்டனர். ஈரான் - இஸ்ரேல் மோதல் மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பகுதிகளில் நிலவும் பதற்றம் குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் விரிவடைந்து வருவது குறித்து இரு தலைவர்களும் தங்களது ஆழ்ந்த கவலைகளைப் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக, சர்வதேசக் கடற்பரப்பில் கப்பல் போக்குவரத்துப் பாதிப்பு மற்றும் எரிபொருள் விநியோகச் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பிராந்தியத்தில் அமைதியை விரைவாக மீட்டெடுக்கவும், வன்முறையைக் கட்டுப்படுத்தவும் இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் இணைந்து சர்வதேச அளவில் செயல்பட உள்ளதாகப் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
வன்முறை எதற்கும் தீர்வாகாது என்றும், ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டைப் பிரதமர் மீண்டும் மேக்ரானிடம் வலியுறுத்தினார். ஏற்கனவே ஈரான் உச்சத் தலைவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்தியா, தற்போது மேற்கத்திய நாடுகளின் முக்கியத் தலைவரான மேக்ரானுடன் ஆலோசித்திருப்பது, போரை நிறுத்த இந்தியா எடுத்து வரும் தீவிரமான ராஜதந்திர நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அணு ஆயுதங்களை அதிகரிக்கும் பிரான்ஸ்! அதிபர் மேக்ரான் அதிரடி உத்தரவு!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், உலகளாவிய அமைதிக்கு வித்திடவும் பிரான்ஸுடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராக உள்ளது என இந்த ஆலோசனைக்குப் பிறகு பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மும்பையில் மோடி மேக்ரான் சந்திப்பு...! இந்தியா - பிரான்ஸ் இடையே மெகா ஒப்பந்தங்கள் கையெழுத்து!