×
 

இந்தியா எப்போதுமே அமைதியின் பக்கமே நிற்கும்!! உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி உறுதி!

ஜி7 உச்சி மாநாட்டின் இடையே நடைபெற்ற கூட்டத்தில், பிரதமர் மோடியும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியும் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து விவாதித்த நிலையில், அமைதிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார்.

பிரான்ஸ்: ஜி7 உச்சி மாநாட்டின் போது நடைபெற்ற முக்கிய இருதரப்பு சந்திப்பில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோர் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது, உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் தெளிவுபடுத்தியது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரான்சின் எவியான் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தக வளர்ச்சி மற்றும் எதிர்கால கூட்டாண்மை வாய்ப்புகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்திப்புக்குப் பிறகு சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்ட பிரதமர் மோடி, சமீப ஆண்டுகளில் இந்தியா மற்றும் உக்ரைன் இடையிலான உறவுகள் பல துறைகளில் வளர்ச்சி கண்டுள்ளதாக குறிப்பிட்டார். போருக்கு முன்பு இருந்த வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாரிஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி! விவாடெக் உச்சிமாநாடு! இந்தியாவுக்கு என்ன பலன்?

மேலும், உலக நாடுகள் எதிர்பார்க்கும் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உருவாக்குவதில் இந்தியா தொடர்ந்து உறுதியாக செயல்படும் என்றும், எந்த மோதலுக்கும் தீர்வு அமைதியான பேச்சுவார்த்தை மூலமே கிடைக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார்.

மறுபுறம், ஜி7 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்க உறுதியளித்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். போர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகளை அதிகரிப்பது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

உலக அரசியல் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு, இந்தியா-உக்ரைன் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, சர்வதேச அமைதி முயற்சிகளில் இந்தியாவின் பங்கையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
 

இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு சர்ப்ரைஸ்! ஸ்லோவாக்கியப் பள்ளி மாணவர்கள் அசத்தல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share