×
 

காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும்.. இஸ்ரேலுக்கு போப் லியோ வலியுறுத்தல்..!

போரால் பாதிக்கப்பட்ட காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும் என இஸ்ரேலுக்கு போப் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காசாவின் மீதான தனது ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ள இஸ்ரேல், அப்பகுதிக்குள் மருந்துகள் உணவுகள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் செல்ல தடை விதித்துள்ளது. இந்த தடைகளை உடனடியாக விலக்க வேண்டும் என பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இஸ்ரேல் அரசுக்கு தற்போது அழுத்தம் கொடுத்து வருகின்றன. அதன் முயற்சியாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் குறைந்த அளவு மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு இஸ்ரேல் அனுமதி அளித்தது. உதவிகள் காசாவுக்குள் நுழையத் தொடங்கி இருக்கும் நிலையில், இஸ்ரேல் படைகளின் கெடுபிடிகளால் புதிய பொருள்கள், மக்களைச் சென்று அடைவதில் சிக்கல் நீடிக்கிறது. 

இதனிடையே, காசாவில் அடுத்த 48 மணி நேரத்தில் மனிதாபிமான உதவிகள் சென்று சேரவில்லை என்றால்,  14,000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. ஐ.நா செயலாளர் டாம் பிளெட்சரின் இந்த அறிக்கை விவாதத்தை கிளப்பியிருக்கும் நிலையில், அது பாலஸ்தீனியர்கள் எதிர்கொண்டுவரும் மனிதாபிமான பேரழிவை அடிக்கோடிட்டு காட்டுவதையே நோக்கமாக கொண்டது என்றே கூறப்படுகிறது. என்றாலும், உற்று நோக்கினால் இந்த எண்ணிக்கை உடனடி இறப்பு என்பதைத் தாண்டி, நீண்டகால கணிப்பை அடிப்படையாக கொண்டது என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: காசாவில் குண்டு மழை.. மீண்டும் தொற்றிய போர் பதற்றம்.. பிஞ்சு குழந்தைகள் உடல் கருகி பலியான சோகம்..!

இந்நிலையில் வாடிகன் நகரத்தின் தலைவரும், கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பதினான்காம் லியோ புனித பீட்டர் சதுக்கத்தில் தனது முதல் வார உரையை மக்களிடம் ஆற்றினார். அப்போது போரில் பாதிக்கப்பட்ட காசாவுக்குள் மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு இஸ்ரேல் விதித்துள்ள தடையை விலக்கி அங்கு வாழும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் காசா பகுதியின் நிலைமை மிகவும் வருத்தமளிப்பதுடன், வலி மிகுந்ததாக உள்ளதாக கூறிய அவர், அம்மக்களின் தலையில் இடியை இறக்கும் விலைவாசிக்கு முற்றுப்புள்ளி வைத்து காசாவுக்குள் போதுமான அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தப் பேரழிவின் விலையை குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் போப் லியோ கூறினார். 

கடந்த மே 8ம் தேதி அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த போப் பதினான்காம் லியோ இஸ்ரேல்-ஹமாஸ் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: உணவுக்காக கையேந்தும் நிலைமை..! பசி, பட்டினியால் தவிக்கும் காஸா மக்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share