நல்லாத்தான் பேசுறாரு!! ஆனா குண்டு போடுறாரே! புதினை பாராட்டுவது போல வாரிவிடும் ட்ரம்ப்!
நன்றாக பேசிவிட்டு பின் அனைவர் மீதும் குண்டு வீசுகிறார் என ரஷ்ய அதிபர் புடின் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
1991இல் சோவியத் ஒன்றியம் சிதறிய பின்னர், உக்ரைன் சுதந்திரமடைந்தது, ஆனால் ரஷ்யா அதை தனது செல்வாக்கு வட்டத்திற்குள் வைத்திருக்க விரும்பியது. உக்ரைனின் மேற்கத்திய நாடுகளுடனான நெருக்கம், குறிப்பாக நேட்டோவில் இணைவதற்கான முயற்சிகள், ரஷ்யாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டது.
மேலும், கிழக்கு உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறி, ரஷ்யா 2014இல் கிரிமியாவை ஆக்கிரமித்து, டான்பாஸ் பகுதியில் பிரிவினைவாதப் போரை ஆதரித்தது.
உக்ரைன்-ரஷ்யா போர் 2014இல் கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமித்ததில் தொடங்கி, 2022 பிப்ரவரி 24இல் முழு அளவிலான படையெடுப்புடன் உச்சத்தை அடைந்தது. இதன் முக்கிய காரணம், உக்ரைனின் நேட்டோ (NATO) உறுப்பினர் ஆகும் முயற்சிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் காட்டும் கடும் எதிர்ப்பு தான். புதின், நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தை ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதுகிறார்.
இதையும் படிங்க: குற்றவாளி நெதன்யாகுவை ஏன் அரஸ்ட் பண்ணல? இத்தாலி, பிரான்ஸ், கிரிஸ் நாடுகளுக்கு ஐ.நா நிருபர் கேள்வி..!
1994 புடாபெஸ்ட் ஒப்பந்தத்தில், உக்ரைனின் இறையாண்மையை மதிப்பதாக ரஷ்யா உறுதியளித்திருந்தாலும், 2014இல் கிரிமியாவை ஆக்கிரமித்து, டான்பாஸ் பகுதியில் பிரிவினைவாதத்தை ஆதரித்தது. 2022இல், உக்ரைனை "டி-நாஜிஃபிகேஷன்" செய்யவும், நேட்டோவை தடுக்கவும் என்ற பெயரில் புதின் முழு அளவிலான படையெடுப்பை தொடங்கினார், இது உக்ரைனின் இறையாண்மைக்கு எதிரானதாகக் கருதப்படுகிறது.
தற்போது இந்தப் போர் 1,270 நாட்களுக்கு மேல் (3.5 ஆண்டுகள்) நீடிக்கிறது. இதில் உக்ரைனின் 18-20% நிலப்பரப்பு, கிரிமியா மற்றும் டான்பாஸ் உள்ளிட்டவை, ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சேதங்கள் மிகவும் பயங்கரமானவை.
பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்களும், 40,000-த்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். 37 லட்சம் உக்ரைனியர்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தனர், 69 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தப்பினர். உக்ரைனின் மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன, இது உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடிகளை தூண்டியது.
ரஷ்யாவும் பொருளாதார தடைகளால் பாதிக்கப்பட்டு, 315,000 வீரர்கள் இழப்பு மற்றும் $211 பில்லியன் செலவை சந்தித்தது. இதனிடையே இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், புதினுடன் ஆறு முறை தொலைபேசியில் பேசினார், முக்கியமாக 30-நாள் போர்நிறுத்தத்தை முன்மொழிந்தார்.
சவுதி அரேபியா மற்றும் துருக்கியில் நடந்த பேச்சுவார்த்தைகளில், உக்ரைனின் நேட்டோ உறுப்பினர status மற்றும் கிரிமியாவை ரஷ்யாவுக்கு விட்டுக்கொடுப்பது போன்ற புதினின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன, ஆனால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இவற்றை நிராகரித்தார். பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன, மேலும் ரஷ்யா கியவ் மற்றும் சுமி மாகாணத்தில் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை தீவிரப்படுத்தியது.
ட்ரம்ப் முதலில் புதினை “புத்திசாலி” என புகழ்ந்தார், ஆனால் 2025 இல் அவரது தொனி மாறியது. ஜூலை 8, அன்று, “புதின் மக்களை கொடூரமாக கொல்கிறார், அவரது பேச்சு பயனற்றது” என விமர்சித்தார். மே 26 இல், “புதினுக்கு என்ன ஆனது? தேவையின்றி பலரை கொல்கிறார்” எனக் கூறினார், கியவ் மீதான மூன்று நாள் தாக்குதல்களை குறிப்பிட்டு. ஜூலை அன்று, ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்களை ட்ரம்ப் கண்டித்தார்
இது தொடர்பாக வாஷிங்டனில் நிருபர்கள் சந்திப்பில் டிரம்ப் கூறியதாவது: ரஷ்ய அதிபர் புடின் நன்றாக பேசிவிட்டு பின் அனைவர் மீதும் குண்டு வீசுகிறார். உக்ரைனுக்கு புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை அமெரிக்கா அனுப்ப உள்ளது. ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும். புடின் உண்மையிலேயே பலரை ஆச்சரியப்படுத்தினார். அவர் நன்றாகப் பேசுகிறார், பின்னர் மாலையில் அனைவரையும் தாக்குகிறார்.
அவர் [புடின்] தான் சொன்னதை புரிந்து கொள்வார் என்று நான் நினைத்தேன். அவர் இரவில் அனைவரையும் குண்டுவீசித் தாக்கி வருவது எங்களுக்கு பிடிக்கவில்லை. இதுவரை போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என ட்ரம்ப் வருத்தம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 900 பேரை கொன்று குவித்த அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம்.. பாலிஸ்டிக் ஏவுகணைகளால் பதிலடி கொடுத்த ஈரான்..!