ராமதாஸை சந்தித்தேன்! நல்ல செய்தி கிடைத்தது! பொடி வைத்து பேசும் கமல்! கூட்டணிக்கு அச்சாரமா?
பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் ராமதாஸை, கமல்ஹாசன் இன்று சந்தித்து பேசினார்.
உடல் நலக் குறைவால் சென்னை அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடந்த அக்டோபர் 6 அன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது, இருவரும் தனியாக அரை மணி நேரம் பேசியதாகவும், பாமக-அதிமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, இன்று (அக்டோபர் 7) மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தார். ராமதாஸின் உடல்நிலை நலமாக இருப்பதாகவும், இன்று மாலை அவர் வீடு திரும்புவார் எனவும் கமல் தெரிவித்தார்.
ராமதாஸ் அக்டோபர் 5 (ஞாயிறு) மாலை வழக்கமான இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அதே மருத்துவமனையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அக்டோபர் 4 (சனி) அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவருக்கும் இதய நிபுணர் டாக்டர் ஜி. செங்கோட்டுவேலு தலைமையிலான குழு சிகிச்சை அளித்து வருகிறது.
இதையும் படிங்க: ஸ்டாலினிடம் அனுமதி வாங்கிட்டுதான் ராகுல்காந்தி பேசணுமா? கரூர் விவகாரத்தில் காங்., கோஷ்டி மோதல்!
அப்பல்லோ இயக்குநர் டாக்டர் பி.ஜி. அனில், "ராமதாஸின் உடல்நிலை நிலையானது. ஆங்கியோகிராம் செய்யப்பட்டு, இதய ரத்தக்குழாய்கள் சரியாக உள்ளன. ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்" என உறுதிப்படுத்தினார். வைகோவும் நலமுடன் ஓய்வெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமதாஸ் ஆதரவாளியான எம்எல்ஏ அருள், தனது முகநூல் பதிவில், "மருத்துவர் அய்யாவுடன் எடப்பாடியார் தனிமையில் 30 நிமிடம் பேசியது உண்மை... என்ன பேசினார்கள் என்பது எனக்கு தெரியாது" எனக் குறிப்பிட்டுள்ளார். தகவலறிந்த வட்டாரங்கள், "2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி தொடர்பாக இருவரும் விரிவாகப் பேசியுள்ளனர்" எனத் தெரிவிக்கின்றன.
பாமக மற்றும் அதிமுக இடையேயான கூட்டணி, 2024 லோக்சபா தேர்தலில் பாஜக-அதிமுக பிளவுக்குப் பின் மீண்டும் வலுப்படுத்தப்படலாம் என அரசியல் விசாரகர்கள் கூறுகின்றனர். ராமதாஸ், பாமக பொதுச் செயலாளராகத் தன்னை மீண்டும் அறிவித்த பிறகு, கூட்டணி முடிவுகளைத் தான் எடுக்கும் என உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே, கமல்ஹாசன் இன்று மருத்துவமனைக்குச் சென்று ராமதாஸை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "டாக்டர் அய்யாவை நலம் விசாரிக்க வந்தேன். ஆனால், விசாரிப்பதற்கு முன்பே நல்ல செய்தி கிடைத்தது. இன்று மாலை அவர் வீடு திரும்புவார். ராமதாஸ் உடன் பேசினேன், அவர் நலமாக இருக்கிறார். வைகோ ஐயாவும் ஓய்வெடுத்து வருகிறார். அதனால், அவரது மகன் துரை வைகோவை சந்தித்தேன். இருவரும் நலமுடன் உள்ளனர்" எனத் தெரிவித்தார்.
கரூர் நெரிசல் சம்பவத்தைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த கமல், "கரூர் சம்பவம் குறித்து தினமும் பேச வேண்டாம். அது சோகம் தான், ஆனால் அதைப் பற்றி தொடர்ந்து பேசுவதால் சோகம் போகாது. இனி இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்வது நம் கடமை. கரூர் சம்பவம் அரசியலாக மாறுகிறதா? எதில் வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம். இப்போது நான் பேசுவதை கூட அரசியல் செய்யலாம். அதை அரசியல் செய்யாமல் இருப்பது நம் கடமை" என வலியுறுத்தினார்.
செப்டம்பர் 27 அன்று விஜயின் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) பிரசாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த கரூர் சம்பவம், தமிழக அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. கமலின் இக்கருத்து, அரசியல் கட்சிகளிடையேயான விமர்சங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.
ராமதாஸ் மற்றும் வைகோவை இதுவரை முதல்வர் மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சந்தித்துள்ளனர். இமயமலையில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் ராமதாஸை நலம் விசாரித்தார். ராமதாஸின் உடல்நிலை முழுமையாகத் தேறி, அவர் விரைவில் பொதுவாழ்வுக்கு திரும்புவார் என ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: விஜயை குற்றவாளி ஆக்காதீங்க! திமுகவை வீழ்த்துவதே பொது இலக்கு! அண்ணாமலை சப்போர்ட்!