சவுதி விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்! இந்தியர் உட்பட 13 பேர் பலி; 300-க்கும் மேற்பட்டோர் காயம்!
தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்தியர் ஒருவர் பின்னர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
ரியாத்: சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், இந்தியர் ஒருவர் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், விமான நிலையத்தின் பாதுகாப்பு குறித்து சர்வதேச அளவில் கவலை எழுந்துள்ளது.
ஏமனில் அரசுப் படைகளுக்கும் ஹவுதி அமைப்பினருக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் நடைபெற்று வருகிறது. இந்த மோதலில் ஏமன் அரசுப் படைகளுக்கு சவுதி அரேபியா ஆதரவு அளித்து வருகிறது. ஹவுதி அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில், சவுதி அரேபியாவின் முக்கிய விமான நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அக்டோபர் 10ஆம் தேதி ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்றது. சவுதி அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, ஆரம்பத்தில் 12 பேர் உயிரிழந்தனர்; 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையும் படிங்க: சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்?! 12 பேர் பலி, 300-க்கும் மேற்பட்டோர் காயம்!
இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக ஹவுதி அமைப்பு அறிவித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. விமான நிலையத்தில் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதுகாப்பு நிலை குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, அக்டோபர் 11ஆம் தேதியும் ரியாத் விமான நிலையத்தின் முனையப் பகுதியில் மற்றொரு தாக்குதல் நடந்தது. இதில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாகவும், 11 பேர் காயமடைந்ததாகவும் சவுதி விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய வெளியுறவு அமைச்சகம், சவுதி அரேபியாவில் பொதுமக்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்துள்ளது. இத்தகைய தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் இந்தியா கூறியுள்ளது. சவுதியில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
தொடர்ச்சியான தாக்குதல்களால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் விமான நிறுவனங்களின் அறிவிப்புகளையும் அதிகாரப்பூர்வ பயண ஆலோசனைகளையும் கவனித்து வருவது அவசியமாகியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவின் ரியல் ஹீரோ சுமித் மச்சார் உடல்நிலை எப்படி இருக்கு? இந்திய தூதரகம் வெளியிட்ட அப்டேட்!