×
 
☰

ரஷ்யாவில் ப்ளேக் நோய் பரவும் அச்சம்!! பெண் ஆராய்ச்சியாளர் திடீர் மரணம்! தீவிர கண்காணிப்பு!

அவரது உடல்நிலை மோசமடைந்ததால் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 2-ம் தேதி அவர் உயிரிழந்தார்.

ரஷ்யாவின் இர்குட்ஸ்க் பகுதியில் உள்ள பிளேக் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் கடுமையான நிமோனியா பாதிப்பால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்த 197 பேர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பிளேக் தொற்று குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ரஷ்ய சுகாதார அதிகாரிகள் இதுவரை அந்த பெண்ணின் மரணம் பிளேக் காரணமாக ஏற்பட்டது என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.

இர்குட்ஸ்க் நகருக்கு அருகே உள்ள ஷெலெகோவ் பகுதியில் பிளேக் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு பணியாற்றிய பெண் ஆய்வாளர் ஒருவர் செப்டம்பர் 29-ம் தேதி கடுமையான நிமோனியா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 2-ம் தேதி அவர் உயிரிழந்தார்.

இதையும் படிங்க: உங்கள் பிள்ளைகளையும் சாப்பிடச் சொல்லுங்கள்! பான், குட்கா விளம்பர நடிகர்களை வெளுத்து வாங்கிய அதிகாரி!

இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் ஆய்வகத்தில் பணியாற்றியவர்களை அதிகாரிகள் அடையாளம் கண்டு மருத்துவக் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

தற்போது கண்காணிப்பில் உள்ளவர்களில் நோய் அறிகுறிகள் கண்டறியப்படவில்லை என்றும், மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் எதிர்மறையாக இருந்ததாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், ஆய்வகத்தில் மாதிரிகளை சேகரிக்கும் பணியின்போது யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பிளேக் நோய்க்கு காரணமான பாக்டீரியா இருந்ததாகக் கூறப்படும் ஆய்வுக்குழாய் உடைந்ததாகவும், அதன் மூலம் பெண்ணுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த ஆய்வக விபத்து தொடர்பான தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

ரஷ்யாவின் நுகர்வோர் உரிமைகள் மற்றும் மனித நலக் கண்காணிப்பு அமைப்பான ரோஸ்போட்ரெப்நாட்ஸோர், அந்த பெண்ணுக்கு காரணம் தெரியாத நிமோனியா ஏற்பட்டதாகவும், அவரது நோய்க்கும் பணிச்சூழலுக்கும் தொடர்புடைய நுண்ணுயிர்கள் பரிசோதனையில் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இர்குட்ஸ்க் மற்றும் ஷெலெகோவ் பகுதிகளின் தொற்றுநோய் நிலைமை சீராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனால், பிளேக் பரவல் குறித்த அச்சம் எழுந்தாலும், தற்போதைய நிலவரப்படி அதற்கான அதிகாரப்பூர்வ உறுதி இல்லை. 197 பேரின் உடல்நிலையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: டெங்குவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு முக்கியம்! அமைச்சர் அருண்ராஜ் விடுத்த முக்கிய வேண்டுகோள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share