அமெரிக்க மசூதியில் துப்பாக்கிச்சூடு... பாதுகாப்பு அதிகாரி உட்பட 3 பேர் பலி... இறுதியில் நடந்த விபரீதம்...!
சான் டியாகோவின் கிளேர்மாண்ட் மேசா பகுதியில் உள்ள இஸ்லாமிய மசூதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சான் டியாகோ கவுன்டியின் மிகப்பெரிய மசூதியான கிளேர்மாண்ட் பகுதியில் உள்ள மசூதியில், நண்பகல் தொழுகைக்குச் சற்று முன்பு இந்தத் தாக்குதல் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இளைஞர்களுக்கு இஸ்லாம் மீது இருந்த வெறுப்பு காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் எஃப்.பி.ஐ விசாரித்து வருகிறது.
ஏனெனில், தாக்குதல் நடத்திய இளைஞர்களில் ஒருவர் தனது பெற்றோரின் வீட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து வந்ததும் இனவெறி சார்ந்த கருத்துக்கள் அடங்கிய தற்கொலை கடிதத்தை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் ஒன்றில் வெறுப்பை உமிழும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளைஞர்கள் மசூதி வளாகத்தில் இருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து தப்பிய இருவரும், பக்கத்து தெருவில் தங்களது காரை நிறுத்திவிட்டு தங்களைத் தாங்களே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்கள் மீது தீவைத்தவர் கைது... முதியவர் கொடுத்த பகீர் வாக்குமூலம்...!
சான் டியாகோ காவல்துறைத் தலைவர் ஸ்காட் வால் கூறியதாவது: “இது ஒவ்வொரு சமூகத்தின் மிக மோசமான கனவு.” எனக்குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமிய மையத்தின் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மூவரின் உடலை கைப்பற்றினர். பின் பக்கத்து தெருவில் காருக்குள் இறந்து கிடந்த இரு இளைஞர்களின் உடல்களையும் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களையும் கைப்பற்றினர். பாதுகாப்பு அதிகாரியின் துணிச்சலான நடவடிக்கையே அதிக உயிரிழப்புகள் மற்றும் அசம்பாவிதத்தை தவிர்த்ததாக தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: #Breaking விடிந்ததும் இடியாய் இறங்கிய செய்தி... பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு...!!