பெருங் கலைஞன்... பேராளுமை..! கமல்ஹாசனுக்கு புகழ் மகுடம் சூட்டிய சீமான்...!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசனுக்கு சீமான் வாழ்த்து தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். நடிப்பில் நீங்காத இடத்தை பிடித்த கமல்ஹாசன் அரசியலிலும் கால் தடம் பதித்து, நாடாளுமன்றத்தில் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு பல்வேறு அரசியல், திரைத்துறையினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த்திரையை தம் கலைத்திறனால் கட்டி ஆளும் உலக நாயகன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர், என் பேரன்பிற்குரிய அண்ணன் கமல்ஹாசன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். திரைக்கலை மீது கொண்டிருக்கும் அளப்பெரும் காதலால் புதுமையான முயற்சிகளையும், நவீன மாற்றங்களையும் புகுத்தி, தமிழ்த்திரையுலகைப் பன்னாட்டுத்தரத்திற்கு எடுத்துச் சென்ற ஆகச்சிறந்த திரைக்கலைஞர் என்று புகழாரம் சூட்டினார்.
நடிப்பின் பேரிலக்கணமாய் திகழ்ந்து, வருங்கால தலைமுறையினருக்கு வழிகாட்டும் பல்கலைக்கழகமாய் விளங்கும் கலைத்துறையின் பேராசான் என சீமான் புகழ்ந்துள்ளார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடனக்கலைஞர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகத்திறன் கொண்ட மகத்தான படைப்பாளி என்று கமல்ஹாசனுக்கு புகழ் மகுடம் சூட்டினார் சீமான்.
இதையும் படிங்க: குழந்தைகள் பாதுகாப்பு முக்கியமா தெரியலையா? சிதைந்து பள்ளிகளை சீரமைக்க சீமான் வலியுறுத்தல்...!
இந்நூற்றாண்டின் ஈடுஇணையற்ற பெருங்கலைஞர், திரைத்துறையின் பேராளுமை, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் மாநிலங்களவை உறுப்பினர் உலகநாயகன் கமல்ஹாசன் மக்களை மகிழ்விக்கும் கலைப்பணியோடு, அரசியல் பணியும் சிறக்க என்னுடைய அன்பும், வாழ்த்துகளும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆரியர் ஜெயலலிதா அதிமுக தலைவர் ஆனது எப்படி? உதயநிதி காலில் விழுவது தான் சுயமரியாதையா?... வெளுத்து வாங்கிய சீமான்...!