×
 

செங்கோட்டையனுக்கு மவுசு!! கட்சி தாவ தயாராகும் கரை வேட்டிகள்! கொங்கு மண்டலத்தில் காத்திருக்கும் அதிர்ச்சி!

செங்கோட்டையன் அமைச்சர் ஆகி விட்டதால், கொங்கு மண்டலத்தில் உள்ள தி.மு.க., -- அ.தி.மு.க., நிர்வாகிகள், அவர் மூலம் தமிழக வெற்றிக் கழகத்துக்கு தாவ முயற்சி செய்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக்கழக அரசில் அமைச்சராக செங்கோட்டையன் இடம்பெற்றிருப்பது, கொங்கு மண்டல அரசியலில் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக திமுக மற்றும் அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் பல முக்கிய நிர்வாகிகள் தற்போது தவெக பக்கம் நகர தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன், கடந்த ஆண்டு விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். அதன் பின்னர் கொங்கு மண்டலத்தில் கட்சியை பலப்படுத்தும் முக்கிய பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் தவெக அமைப்பை வலுப்படுத்த செங்கோட்டையன் தீவிரமாக செயல்பட்டார்.

திமுக மற்றும் அதிமுகவில் அதிருப்தியில் இருந்த நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து தவெகவில் இணைக்க முயற்சிகளும் மேற்கொண்டார். சிலரது வீடுகளுக்கே சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அப்போது தவெக புதிய கட்சியாக இருந்ததால் பலர் வெளிப்படையாக இணைய தயக்கம் காட்டியிருந்தனர்.

இதையும் படிங்க: வாகை சூடிய செங்கோட்டையன்... தமிழக அரசியல் களத்தில் செய்த மாஸ் சாதனை... ஸ்டன் ஆன அதிமுக...!

இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் தவெக ஆட்சியை பிடித்ததோடு, செங்கோட்டையனுக்கு அமைச்சரவை பொறுப்பும் வழங்கப்பட்டது. அவர் அமைச்சராக பதவியேற்ற போது முதலமைச்சர் விஜய் எழுந்து நின்று வரவேற்ற சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

இதன் மூலம் கொங்கு மண்டலத்தில் தவெகவின் முக்கிய முகமாக செங்கோட்டையன் உருவெடுத்துள்ளார் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

தற்போது திமுக மற்றும் அதிமுகவில் வாய்ப்பு கிடைக்காமல் ஓரங்கட்டப்பட்ட பல நிர்வாகிகள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் செங்கோட்டையனை தொடர்புகொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு உள்ளாட்சி தேர்தலும், 2029 மக்களவை தேர்தலும் வர உள்ளதால், தவெகவில் இணைவதற்கு இதுவே சரியான நேரம் என அவர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த பிறகு, கொங்கு மண்டலத்தில் முக்கிய அரசியல் மாற்றங்கள் தொடங்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. குறிப்பாக “கரை வேட்டிகளின் நிறம் மாறும் காலம் தொடங்கிவிட்டது” என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இதையும் படிங்க: விஜயை பாத்தா எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பாத்த மாதிரி இருக்கு! செங்கோட்டையன் நெகிழ்ச்சி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share