வங்கதேசம் திரும்பியதும் அடுத்த அதிரடி! மீண்டும் இந்தியா வந்து மோடியை சந்திப்பேன்: ஷேக் ஹசீனா!
தனது கட்சி மற்றும் தன்மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும் என்றும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி: இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தனது சொந்த நாட்டுக்கு மீண்டும் திரும்புவேன் என்றும், அதன்பிறகு இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்திப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த தனியார் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் பல்வேறு முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.
தான் விருப்பப்பட்டு வங்கதேசத்தை விட்டு வெளியேறவில்லை என்றும், பாதுகாப்பு காரணங்களாலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினரின் வற்புறுத்தலாலும் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் ஷேக் ஹசீனா கூறியுள்ளார். 2024 ஆகஸ்ட் 5-ம் தேதி ஹெலிகாப்டரில் ஏறும் நேரத்தில்தான் இந்தியா செல்வது தனக்கு தெரிய வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு வந்த பிறகு அந்நாட்டு அரசு தேவையான பாதுகாப்பை வழங்கியதாகவும், அதற்காக நன்றி தெரிவிப்பதாகவும் ஷேக் ஹசீனா குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில், தனது தாயகத்தை விட்டு வெளியேறியது மிகவும் வேதனையான அனுபவம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவை விட்டு வேறு எந்த நாட்டுக்கும் செல்லும் திட்டம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: போதைப்பொருள் பயன்படுத்தியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்? வங்கதேசத்தில் இந்து ஆசிரியர் குடும்பமே கொலை; 2 பேர் கைது!
தற்போது வரை பிரதமர் மோடியை சந்திக்க தான் முயற்சி செய்யவில்லை என்றும், முதலில் வங்கதேசத்துக்கு திரும்பி, அங்கு நிலைமை சீரடைந்த பின்னர் மீண்டும் இந்தியா வந்து மோடியை சந்திக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வங்கதேச அரசு தன்னை திருப்பி அனுப்புமாறு இந்தியாவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும், ஆனால் அதற்கான அவசியம் இல்லை என்றும், தானாகவே நாடு திரும்புவேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும், தனது கட்சி மற்றும் தன்மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும் என்றும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அவாமி லீக்கை யார் வழிநடத்த வேண்டும் என்பதை வங்கதேச அரசோ அல்லது எதிர்க்கட்சியான பிஎன்பி-யோ தீர்மானிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்து ஒருவர் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பாக மற்றொரு நாட்டிடம் அனுமதி கேட்க முடியாது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். கட்சி விரும்பினால், அவாமி லீக் தலைவர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.
இதையும் படிங்க: டெல்லி மெட்ரோவில் பிரதமர் மோடி பயணம் வைரல்! குழந்தைகளுடன் நடந்த சுவாரஸ்ய உரையாடல்!