×
 

புத்த துறவிகளிடம் ரூ.110 கோடிக்கு போதைப் பொருள்!! கொழும்பு ஏர்போர்ட்டில் பரபரப்பு!

தாய்லாந்திலிருந்து கொழும்பு வந்த புத்த துறவிகள் 22 பேரிடம் இருந்து ரூ.110 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு: தாய்லாந்தில் இருந்து கொழும்பு சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த 22 புத்த துறவிகளிடம் இருந்து ரூ.110 கோடி மதிப்புள்ள 110 கிலோவுக்கும் மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் இதுவரை நடந்த மிகப் பெரிய போதைப்பொருள் பறிமுதல் என்று கூறப்படுகிறது.

நேற்று இரவு (ஏப்ரல் 25) சுமார் 10.10 மணியளவில் தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து தாய் ஏர் ஏசியா விமானம் மூலம் வந்த இந்தக் குழுவினரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர். அவர்கள் கொண்டு வந்த பள்ளி உபகரணங்கள் மற்றும் இனிப்புப் பொட்டலங்கள் நிறைந்த பெட்டிகளில் ரகசிய அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. 

அந்த ரகசிய இடங்களில் குஷ் மற்றும் ஹாஷ் போன்ற போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு துறவியிடமும் சுமார் 5 கிலோவுக்கு மேல் போதைப்பொருள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு? முன்பே எச்சரித்த பெண் அதிகாரி!? வெள்ளை மாளிகையில் அரங்கேறிய மர்மம்?!

விசாரணையில், இவர்கள் அனைவரும் இலங்கைக்கு சொந்தமானவர்கள் என்பதும், உயர் கல்விக்காக இலங்கையில் பல்வேறு நிறுவனங்களில் பயின்று வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. ஏப்ரல் 22ஆம் தேதி ஒரு ஸ்பான்சர் அளித்த விமான டிக்கெட் மூலம் இவர்கள் பாங்காக் சென்றுள்ளனர். அவர்களின் செல்போன்களை ஆய்வு செய்தபோது, வெளிநாடுகளில் சாதாரண உடையில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தது அதிகாரிகளின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

இந்தச் சம்பவம் புத்த மதத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக பலரும் கவலை தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இவர்களை உடனடியாக கைது செய்து விசாரணைக்காக 7 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு பெற்றுள்ளனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வரும் நிலையில், விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தப் பறிமுதல் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்குகளுக்கு பெரிய அடியாக அமையும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: 'கேமரா கண்கள்' மூடின..!! இந்தியாவின் ஐகானிக் புகைப்படக் கலைஞர் ரகு ராய் மறைவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share