×
 

புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்திற்கு கடும் கட்டுப்பாடுகள்: "ஒரு பாசுக்கு ஒருவர் மட்டுமே!" – காவல்துறை எச்சரிக்கை

புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி இல்லாதவர்கள் மற்றும் பாஸ் இல்லாதவர்கள் வருவதைத் தவிர்க்குமாறு காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழகம் சார்பில் புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திற்காக, காவல்துறை மிகக் கடுமையான பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைகளை விதித்துள்ளது. முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் அவர்கள், ஒரு சில ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி, வெளிமாநிலத்தினருக்கு அனுமதி மறுப்பு மற்றும் முக்கிய வழிமுறைகளை உறுதி செய்துள்ளார்.

தவெக சார்பில் அச்சிட்ட அனுமதி பாஸ்கள் குறித்த விவரங்கள் காவல்துறைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் பொதுக்கூட்டத்தில் 5,000 நபர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். இவர்கள் அனைவரும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவும், தவிகா கட்சித் தொண்டர்களாகவும் இருக்க வேண்டும்.

ஒரு க்யூ ஆர் கோடு (QR Code) கொண்ட பாஸுக்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். பாஸ் இல்லாமல் வேறு யாரும் வர முடியாது. தமிழ்நாட்டில் இருந்தோ அல்லது அண்டை மாநிலங்களில் இருந்தோ வேறு யாருக்கும் அனுமதி தரப்படவில்லை. தமிழகக் காவல்துறையிடமும் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நிபந்தனைகளுடன் அனுமதி: விஜய் பரப்புரை கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி - தமிழ்நாட்டினருக்குத் தடை!

பொதுக்கூட்டத்திற்கு அனுமதி இல்லாதவர்கள் மற்றும் பாஸ் இல்லாதவர்கள் வருவதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. "அவர்கள் இங்கு வருவதனால் இரண்டு தரப்பு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும்," என்றும், புதுச்சேரி சாலைகள் சிறியதாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில், கூட்டத்தில் பங்கேற்கும் 5,000 பேருக்கும் சிறப்பு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது:

கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், உடல்நிலை முடியாமல் இருப்பவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் யாரும் பொதுக்கூட்டத்திற்கு வர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெறிமுறைகளைக் கடைப்பிடித்தும், அமைதியான முறையில் பொதுக்கூட்டத்தை நிகழ்த்தித் தருமாறும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி மாநில எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் வேலைக்காக புதுச்சேரி வரும் பயணிகளுக்கு எந்தவித நிபந்தனையும் கிடையாது என்றும், ஆனால் பொதுக்கூட்டத்திற்காக யாரும் முயற்சி செய்து வர வேண்டாம் என்றும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நேரம் காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை ஆகும். கூட்டம் நடைபெறும் இடம் 20 ஏக்கருக்கு மேலாக உள்ளது. அங்குத் தேவையான அளவிற்கு மூன்று இடங்களில் அவசர வெளியேறும் வழிகள் (Emergency Exit) ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒழுங்கு நடவடிக்கைகள்: தொண்டர்கள் கட்டுக்கோப்புடன் செயல்படுவார்கள் என நம்புவதாகவும், மேடையில் மோதல்களைத் தவிர்க்க நிறைய வாலன்டியர்கள் கட்சி சார்பில் வந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவது பொதுமக்களுக்கும், கூட்டத்திற்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அனைவரும் பொறுப்புடன் செயல்பட்டு விதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் வழியாகவும் யாருக்கு அனுமதி உண்டு, யாருக்கு இல்லை என்பது குறித்துத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் பொதுக்கூட்டமே நடத்துறோம்.. அனுமதி கேட்டு காவல்துறையிடம் தவெக புதிய மனு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share