×
 

வதந்திகளுக்கு எண்டு கார்டு! பாராசிட்டமால் மாத்திரையால் ஆட்டிசம் வராது.. 'The Lancet' மருத்துவ இதழ் அறிக்கை!

கர்ப்பிணிகள் பாராசிட்டமால் உட்கொள்வதால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தை லான்செட் இதழ் முற்றுபுள்ளி வைத்துள்ளது.

கர்ப்பிணிகள் பாராசிட்டமால் உட்கொள்வதால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் அல்லது ஏடிஹெச்டி (ADHD) பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தை லான்செட் இதழின் புதிய ஆய்வு முற்றிலுமாகத் தகர்த்துள்ளது. முறையான மருத்துவ ஆலோசனையுடன் பாராசிட்டமால் உட்கொள்வது பாதுகாப்பானது என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காய்ச்சல் மற்றும் தலைவலிக்கு உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் (Paracetamol) மாத்திரை குறித்து நிலவி வந்த பல்வேறு மருத்துவக் குழப்பங்களுக்கு உலகப் புகழ்பெற்ற 'The Lancet' மருத்துவ இதழ் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. குறிப்பாகக் கர்ப்ப காலத்தின் போது பெண்கள் பாராசிட்டமால் உட்கொள்வது குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் என்ற நீண்ட கால விவாதத்திற்கு இந்த ஆய்வு ஒரு தீர்க்கமான பதிலைத் தந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, கர்ப்பிணிகள் பாராசிட்டமால் உட்கொள்வதால் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு (Autism), ஏடிஹெச்டி (ADHD) அல்லது அறிவுசார் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகச் சில ஆய்வுகள் தெரிவித்தன. இது உலகெங்கிலும் உள்ள தாய்மார்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், தற்போது 'The Lancet Obstetrics, Gynaecology & Women’s Health' இதழில் வெளியாகியுள்ள புதிய விரிவான ஆய்வறிக்கையின்படி, பாராசிட்டமால் பயன்பாட்டிற்கும் இத்தகைய நரம்பியல் குறைபாடுகளுக்கும் இடையே எந்தவிதமான நேரடித் தொடர்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெட் பாஸ் பண்ணவங்க கதி என்ன?  ஆசிரியர் தேர்வு அட்டவணை எங்கே? திமுக அரசை வெளுத்து வாங்கும் அன்புமணி!

சுமார் 43 முக்கிய ஆய்வுகளை மறுபரிசீலனை செய்த ஆராய்ச்சியாளர்கள், குறிப்பாக ஒரே தாய்க்குப் பிறந்த குழந்தைகளிடையே (Sibling Comparison) ஒப்பீட்டு ஆய்வுகளை மேற்கொண்டனர். அதில், பாராசிட்டமால் உட்கொண்ட காலத்தின் போது பிறந்த குழந்தைக்கும், அந்த மருந்தை உட்கொள்ளாத காலத்தின் போது பிறந்த அதே தாயின் மற்றொரு குழந்தைக்கும் இடையே வளர்ச்சி ரீதியாக எந்த மாற்றமும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. முன்னதாகக் கூறப்பட்ட பாதிப்புகள் மரபணு காரணிகளாலோ அல்லது தாய்க்கு ஏற்பட்ட தீவிர காய்ச்சல் மற்றும் வலியினாலோ ஏற்பட்டிருக்கலாமே தவிர, பாராசிட்டமால் மருந்தினால் அல்ல என்று ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.

லண்டன் சிட்டி செயின்ட் ஜார்ஜ் பல்கலைக்கழகத்தின் மகப்பேறியல் பேராசிரியர் அஸ்மா கலீல் தலைமையிலான குழு இந்த ஆய்வை நடத்தியது. "பாராசிட்டமால் இன்றும் கர்ப்பிணிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் முதல்நிலை பாதுகாப்பான வலி நிவாரணியாகும். காய்ச்சல் அல்லது வலியைச் சிகிச்சை அளிக்காமல் விடுவதுதான் கருவில் உள்ள குழந்தைக்கு அதிக ஆபத்தை விளைவிக்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார். எனினும், எந்தவொரு மருந்தையும் மருத்துவரின் பரிந்துரைப்படி, குறைந்த அளவில் மற்றும் குறுகிய காலத்திற்கு மட்டுமே பயன்படுத்துவது அவசியம் என்பதையும் லான்செட் இதழ் வலியுறுத்தியுள்ளது. இந்தத் தகவல் உலகெங்கிலும் உள்ள மருத்துவ நிபுணர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.


 

இதையும் படிங்க: விடுபட்டவர்கள் கவனத்திற்கு! உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? இன்றே கடைசி வாய்ப்பு.. 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share