×
 

இனி சுலபமா தரிசனம் செய்யலாம்.. திருப்பதியில் வந்தாச்சு AI கட்டுப்பாட்டு அறை..!!

நாட்டிலேயே முதன்முறையாக, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் AI வசதியுடன் கூடிய பக்தர்களுக்கான ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்.

உலகின் மிகவும் பிரபலமான தலமாகத் திகழும் திருமலா திருப்பதி கோயிலில், நாட்டிலேயே முதல் முறையாக செயற்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) இணைந்த கட்டுப்பாட்டு மையம் இன்று தொடங்கி உள்ளது. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயடு இந்த AI கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைத்தார். திருமலா திருப்பதி தேவஸ்தானங்கள் (டிடி) மேலாண்மையின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த இணைந்த கட்டுப்பாட்டு மையம் (ஐசிசி), பக்தர்களின் பாதுகாப்பு, கூட்ட நிர்வாகம் மற்றும் தரிசன அனுபவத்தை மேம்படுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வைக்குண்டம் கியூ காம்ப்ளக்ஸில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஏ.ஐ இயக்கப்பட்ட மையம், 6,000க்கும் மேற்பட்ட ஏ.ஐ கேமராக்களைப் பயன்படுத்தி நிகழ்நேரத்தில் கண்காணிப்பு செய்கிறது. இதில் முக அடையாள அறிந்தல் (ஃபேஷியல் ரெகக்னிஷன்) தொழில்நுட்பம் மூலம் தொலைந்த பக்தர்களைத் தேடி கண்டுபிடிப்பது, திருட்டு அல்லது அசம்பாவிதச் சம்பவங்களைத் தடுப்பது போன்றவை சாத்தியமாகின்றன. கூட்ட நெரிசலை 3டி வரைபடங்களில் காட்டி, சிவப்பு மண்டலங்களாக அடையாளம் காட்டி விரைவான சரிசெய்தலைச் செய்ய உதவுகிறது.

இதையும் படிங்க: திருப்பதிக்கு ஒரு விசிட்.. புன்னகையுடன் பக்தர்களுக்கு உணவு பரிமாறிய நிர்மலா சீதாராமன்..!!

சர்வ தரிசன நேரத்தை முன்னறிவிப்பதோடு, அலிபிரி முதல் கோயில் வரை பக்தர் ஓட்டத்தைப் பகுப்பாய்வு செய்து, நீண்ட வரிசைகளை சுலபப்படுத்துகிறது. இந்த மையம் ஒரு நிமிடத்திற்கு 3,60,000 தரவு பேலோடுகளை செயலாக்கி, தினசரி 5 கோடி நிகழ்வுகளையும் 25 கோடி ஏ.ஐ முடிவுகளையும் உருவாக்குகிறது. பெரிய டிஜிட்டல் ஸ்க்ரீனில் கோயில் முழுவதும் உள்ள சிசிடி டிவி ஃபீடுகள் காட்டப்படும்.

25க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிபுணர்கள் 24/7 கண்காணித்து, அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்கின்றனர். சைபர் அச்சுறுத்தல்களையும் தவறான தகவல்களையும் கண்காணித்து, கோயிலின் புகழைப் பாதுகாக்கிறது. இது டிஜிட்டல் ட்வின் தொழில்நுட்பம் மற்றும் என்விடியா சபோர்ட்டுடன் இயங்குகிறது. NRI-களின் நிதி உதவியுடன் சுமார் 30 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஐசிசி, உலகளாவிய போக்குவரத்து மையங்களின் தொழில்நுட்பத்தை கோயில் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியுள்ளது.

2024ல் 2.55 கோடி பக்தர்கள் வந்த திருமலையில், இது நீண்ட வரிசைகளையும் பாதுகாப்பு குறைபாடுகளையும் தீர்க்கும். "ஏ.ஐ மூலம் பக்தர்களின் அனுபவம் இனி இனிமையாகும்" என முதலமைச்சர் சந்திரபாபு நாயடு தெரிவித்தார். இந்த முயற்சி, தொழில்நுட்பத்தை ஆன்மீகத்துடன் இணைக்கும் புதிய தொடக்கமாக அமைகிறது. பக்தர்கள் இனி குறைந்த நேரத்தில், பாதுகாப்பாக தரிசனம் செய்யலாம். 

இதையும் படிங்க: முடிந்தது சந்திர கிரகணம்.. திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை திறப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share