“Trump 2028” 3-வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியா? ட்ரம்ப் சூசகம்! அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு!
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 2028-ல் போட்டியிட தனக்கு விருப்பம் இருப்பதாகவும், ஆனால் அரசியலமைப்பில் அதற்கு தடை இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “Trump 2028” என்று குறிப்பிடப்பட்ட தொப்பி அணிந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது அமெரிக்க அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் டிரம்ப் மூன்றாவது முறையாக போட்டியிடுவாரா என்ற விவாதம் தற்போது தீவிரமடைந்துள்ளது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. டிரம்ப் முதன்முறையாக 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, 2017-ல் நாட்டின் 45-வது அதிபராக பதவியேற்றார். 2020-ம் ஆண்டு தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார்.
இதையடுத்து 2024-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற்று, 2025-ம் ஆண்டு இரண்டாவது முறையாக அதிபர் பதவியை ஏற்றார்.
இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணை இனி அமெரிக்காவுக்கு சொந்தம்! ஈரானை வீழ்த்தியதும் அடுத்த அதிரடி! ட்ரம்ப் சூசகம்!
அமெரிக்க அரசியலமைப்பின் 22-வது திருத்தத்தின்படி, ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட முடியாது. எனவே, தற்போதைய அரசியலமைப்பு விதிகளின்படி டிரம்ப் 2028-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தடையுள்ளது.
இருப்பினும், மூன்றாவது முறையாக போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தை டிரம்ப் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 2028-ல் போட்டியிட தனக்கு விருப்பம் இருப்பதாகவும், ஆனால் அரசியலமைப்பில் அதற்கு தடை இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில்தான் தற்போது “Trump 2028” என குறிப்பிடப்பட்ட தொப்பியை டிரம்ப் அணிந்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதனுடன் “We’re gonna win” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இதனால் டிரம்ப் தனது அரசியல் எதிர்காலம் குறித்து மீண்டும் ஒரு முக்கிய செய்தியை வெளியிடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒரு புகைப்படம் மட்டுமே என்பதால், 2028 தேர்தலில் டிரம்ப் நிச்சயமாக போட்டியிடுவார் என்று முடிவு செய்ய முடியாது. அதே நேரத்தில், அரசியலமைப்புத் தடையை அறிந்திருந்தும் அவர் தொடர்ந்து மூன்றாவது பதவிக்கான சாத்தியம் குறித்து பேசுவது அமெரிக்க அரசியலில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதனால் “Trump 2028” என்பது வெறும் அரசியல் வாசகமா அல்லது எதிர்கால அரசியல் திட்டத்துக்கான முன்னோட்டமா என்ற விவாதம் அமெரிக்காவில் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
இதையும் படிங்க: டிரம்புக்கே இந்த நிலைமையா?! ஈரான் தாக்குதல் நடத்துமோ என அச்சம்! லாரியில் மறைந்து ரகசிய விமானத்தில் பயணம்!