போரை நிறுத்துங்க.. இது அமைதிக்கான நேரம்..!! கருத்து கூறிய போப் லியோ..!! டிரம்ப் அதிரடி பதிலடி..!!
போப் 14ம் லியோவின் கருத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி நடத்திய தாக்குதலுக்குப் பின்னர், பிராந்தியத்தில் பதிலடி தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதனால் மத்திய கிழக்கு முழுவதும் தொடர்ச்சியான பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தப் போர் சூழலுக்கு மத்தியில், உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் லியோ XIV, வாடிகனில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது, அவர் போர்களின் விளைவுகளை வலியுறுத்தி, “போர்கள் பிரிவினையை மட்டுமே ஏற்படுத்தும். நம்பிக்கையும் அன்பும் தான் அனைவரையும் இணைக்கும்” என்று கூறினார். தற்பெருமை, பணம் மற்றும் வலிமையை வெளிப்படுத்தும் செயல்கள் போதும் என்றும், உண்மையான வலிமை என்பது மற்றவர்களுக்கு சேவை செய்வதில் தான் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார். மேலும், “முட்டாள்தனமான போர்களில் இருந்து ஆட்சியாளர்கள் வெளியே வர வேண்டும். போர்களை உடனடியாக நிறுத்துங்கள். இது அமைதிக்கான நேரம்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
போர் தொடர்பான முடிவுகளை மேஜையில் அமர்ந்து திட்டமிடுவதை விடுத்து, பேச்சுவார்த்தை மற்றும் மத்தியஸ்தத்தின் மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த உரையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்களின் போக்கை மறைமுகமாக விமர்சித்ததாகக் கருதப்படுகிறது. இதற்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்தார்.
இதையும் படிங்க: வெற்றிக்கரமாக முடிவுக்கு வந்தது ஆர்டெமிஸ் 2..!! அடுத்த திட்டம் செவ்வாய்..!! டிரம்ப் போட்ட அதிரடி பதிவு..!!
அதில், தன்னை இயேசு கிறிஸ்து போன்று சித்தரித்திருந்தார். அதன் பின்னர், போப் லியோவுக்கு கடுமையான பதிலடி கொடுத்தார். “நான் போப் லியோவின் ரசிகன் அல்ல. அவர் தனது பணியை சரிவர செய்வதாக நான் நினைக்கவில்லை. அவர் மிகவும் இடதுசாரி சிந்தனையுடையவராக உள்ளார்” என்று தெரிவித்தார். மேலும், “குற்றங்களுக்கு எதிராக அவர் மிகவும் பலவீனமானவர். வெளியுறவுக் கொள்கையிலும் மோசமானவர். ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை அனுமதிக்கலாம் என்று நினைப்பவர் எங்களுக்கு தேவையில்லை” என்றும் டிரம்ப் கூறினார்.
“நான் வெள்ளை மாளிகையில் இல்லாவிட்டால், அவர் வாடிகனில் இருக்கவும் மாட்டார்” என்று கூறி, தான் போப்பின் தேர்வுக்கு பங்களித்ததாகவும் உணர்த்தினார். “போப் லியோ, போப்புக்குரிய பணிகளை மட்டும் கவனிக்க வேண்டும். இடதுசாரி சிந்தனைகளை கைவிட்டு, பொது அறிவுடன் செயல்பட வேண்டும். அரசியல்வாதியாக மாற முயற்சிக்கக் கூடாது. இது அவருக்கும், முழு கத்தோலிக்க திருச்சபைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று டிரம்ப் எச்சரித்தார்.
இந்தப் பரஸ்பர விமர்சனங்கள், ஈரான் தொடர்பான போர் சூழலில் அமெரிக்கா மற்றும் வாடிகன் இடையேயான உறவில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் அமைதிக்கான குரல்கள் அதிகரித்து வரும் நிலையில், தலைவர்களிடையேயான இத்தகைய மோதல்கள் மத்திய கிழக்கு பிரச்னையை மேலும் சிக்கலாக்கும் அபாயம் உள்ளது. இரு தரப்பும் உரையாடல் மூலம் தீர்வு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அமைதி பேச்சுவார்த்தையில் தோல்வி என்றால்... ஈரானுக்கு எதிராக தீவிர ராணுவ நடவடிக்கை தான்..!! டிரம்ப் வார்னிங்..!!