ஈரானுக்கு சல்லிக்காசு கிடையாது! அமைதி ஒப்பந்தத்திற்கு நிவாரணமா? அதிபர் ட்ரம்ப் தடாலடி மறுப்பு!
போரில் ஈரான் முடிந்து விட்டதாகவும், அமெரிக்காவிடம் இருந்து ஈரானுக்கு பணம் கிடைக்காது என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான போர் முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ளார். அதேநேரத்தில், ஈரானின் உள்கட்டமைப்பு சீரமைப்புக்கு அமெரிக்கா எந்தப் பண உதவியும் வழங்காது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
110 நாட்களுக்கு மேல் நீடித்த அமெரிக்கா-ஈரான் போர் கடந்த 11-ம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்தது. 14 அம்சங்கள் கொண்ட இந்த ஒப்பந்தத்தில், போரால் பாதிக்கப்பட்ட ஈரானின் உள்கட்டமைப்புகளை சீரமைக்க 28 லட்சம் கோடி ரூபாய் அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டிருந்தது. ஆனால், டிரம்ப் இந்த உதவியை மறுத்துள்ளார்.
டிரம்ப் தனது அறிக்கையில், “இந்தப் போரில் ஈரானின் ராணுவ திறன்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன. தற்போது ஈரானிடம் விமானப்படை, கடற்படை அல்லது முக்கிய பாதுகாப்பு அமைப்புகள் எதுவும் இல்லை. அமெரிக்காவிடம் இருந்து ஈரானுக்கு எந்தப் பணமும் கிடைக்காது” என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அத்தனை அதிகாரங்களை பயன்படுத்தி நெருக்கடி கொடுத்தார் ட்ரம்ப்! அமைதி ஒப்பந்தம் குறித்து கமேனி விமர்சனம்!
மேலும், “4 மாதங்களுக்கு முன்பை விட இப்போது ஈரான் நல்ல நிலையில் இருப்பதாக ஜனநாயகக் கட்சியினர் கூறுகின்றனர். இப்படி சொல்லி தப்பித்துக் கொள்வதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?” என டிரம்ப் கேள்வி எழுப்பினார். போரைத் தொடர்ந்து அமெரிக்கா அல்ல, ஈரான் தான் பேச்சுவார்த்தைக்கு வந்ததாகவும், அமெரிக்கா தனது காலக்கெடுவின்படி செயல்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஈரான் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனியும், அதிபர் மசூத் பெசெஷ்கியானும் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்த நிலையில், டிரம்ப்பின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒப்பந்தத்தில் உள்ள நிதி உதவி உறுதியாகக் கிடைக்குமா என்பது குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.
ஈரான் மக்களிடையே ஒப்பந்தம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், டிரம்ப்பின் இந்த நிலைப்பாடு புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. சர்வதேச அரசியல் வல்லுநர்கள், அமெரிக்கா-ஈரான் உறவுகள் அடுத்தகட்டம் எப்படி இருக்கும் என உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இந்தப் போர் முடிவுக்கு வந்த பிறகும், இரு தரப்புக்கும் இடையேயான நம்பிக்கைப் பற்றாக்குறை தொடர்வதாக அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். டிரம்ப்பின் அறிவிப்பு வரும் நாட்களில் மத்திய கிழக்கு பிராந்திய அரசியலை எப்படி பாதிக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: நீங்கள் குழப்பமடைவீர்கள்! அதிபர் ட்ரம்ப் மீண்டும் விஷமத்தனம்! அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகுமா?