×
 

உக்ரைன் - ரஷ்யா போர்! புடினுடன் விடிய விடிய பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க பிரதிநிதிகள்!

உக்ரைன் விவகாரத்தில் தீர்வு காண்பது தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பிரதிநிதிகள் விடிய விடிய பேச்சு நடத்தினர்.

மாஸ்கோ/கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நான்காவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் தீவிர முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச சமாதான திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் இடையேயான முத்தரப்பு பேச்சுகள் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை டிரம்பின் சிறப்பு தூதர்கள் ஸ்டீவ் விட்காப் (Steve Witkoff) மற்றும் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) ஆகியோர் மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மாளிகையில் சந்தித்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு தொடங்கிய இந்த பேச்சு, நேற்று அதிகாலை 3 மணி வரை நீடித்தது. இது மிகவும் நீண்டகாலமாக நடைபெற்ற அமெரிக்க-ரஷ்ய உயர்மட்ட பேச்சுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. பேச்சுவார்த்தையின் போது, ரஷ்யா தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி நாளை சந்திப்பு!! இன்று தாக்குதலை தீவிரப்படுத்திய புதின்! உக்ரைன் - ரஷ்யா போர்!

பிராந்திய பிரச்சினைகளை தீர்க்காமல் நீண்டகால அமைதியை எதிர்பார்க்க முடியாது என்று வலியுறுத்திய ரஷ்யா, கிழக்கு உக்ரைனில் தனது படைகளை முழுமையாக கைப்பற்றாத பகுதிகளில் இருந்து உக்ரைன் படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று கோரியுள்ளது. 

மேலும், ரஷ்யா கைப்பற்றியுள்ள உக்ரைன் பகுதிகளை (குறிப்பாக டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் போன்றவை) விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. அந்த நிலங்கள் ரஷ்யாவுக்கு சொந்தமானவை என்பதை உக்ரைன் அங்கீகரிப்பதே பேச்சுவார்த்தைக்கான முதல் படி என்று ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தில் அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேசிய உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக மெத்தனமாக செயல்படுவதாக கடுமையாக சாடியுள்ளார். 

உக்ரைன் ராணுவத்தில் ஆள் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், சுமார் 2 லட்சம் வீரர்கள் ராணுவத்திலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது போரைத் தொடர்வதற்கு உக்ரைனுக்கு பெரும் சவாலாக உள்ளது.

மறுபுறம், அபுதாபியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுகளைத் தொடர்ந்து, டிரம்ப் அணியின் தீவிர முயற்சிகள் போரை முடிவுக்கு கொண்டுவரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், ரஷ்யாவின் கடுமையான நிலைப்பாடு காரணமாக, உடனடி முடிவு எட்டப்படுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா, இரு தரப்பினரிடையேயும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

இதையும் படிங்க: உக்ரைன் - ரஷ்யா போரின் இறுதிக்கட்டம்! வரவிருக்கும் வாரங்கள் மிக முக்கியம்!! ஜெலன்ஸ்கி சூசகம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share