‘Economic D-Day’! அதிபர் டிரம்பின் அடுத்த அதிரடி! ஈரானின் பணப்புழக்கத்தையே முடக்க தயாராகும் அமெரிக்கா?
அமெரிக்காவின் பொருளாதார முற்றுகைக்கு ஆதரவளிக்கும் அல்லது அதில் பங்கேற்கும் நாடுகளும் ஈரானின் எதிரி நாடுகளாக கருதப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாஷிங்டன்: ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார். ஈரானின் அனைத்து நிதி மற்றும் பொருளாதார வழிகளையும் துண்டிக்கும் வகையில் மிகப்பெரிய பொருளாதார தாக்குதலை தொடங்க அமெரிக்கா தயாராகி வருவதாக அவர் கூறியிருப்பது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் முடிவை நெருங்கியுள்ளதாகவும், அடுத்ததாக பொருளாதார போர் தொடங்கும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில், ஸ்காட் பெசென்ட்டின் எக்ஸ் பதிவு வெளியாகியுள்ளது.
அதில், ஈரானின் ராணுவ திறன்களை அமெரிக்கா சிதைத்துள்ளதாகவும், அதன் ஆயுத உற்பத்தி கட்டமைப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் பெசென்ட் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஈரானின் அணுசக்தி திட்டத்துக்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், அமெரிக்க நடவடிக்கை தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ‘ஒரு சொட்டு எண்ணெய்கூட போகாது’!ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போகிறதா ஈரான்? பகீர் மிரட்டல்!
இதையடுத்து, ஈரானின் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் ஒவ்வொரு முக்கிய வழியையும் முடக்கும் நடவடிக்கை தொடங்கும் என அவர் எச்சரித்துள்ளார். இதுவரை பயன்படுத்தப்படாத பல்வேறு அதிகாரங்களையும் அமெரிக்கா பயன்படுத்தும் சூழ்நிலையை டிரம்ப் உருவாக்கியுள்ளதாகவும் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதார முற்றுகைக்கு ஆதரவளிக்கும் அல்லது அதில் பங்கேற்கும் நாடுகளும் ஈரானின் எதிரி நாடுகளாக கருதப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் பாரசீக வளைகுடா வழியாக ஒரு சொட்டு எண்ணெய்கூட ஏற்றுமதி செய்யப்படாது என ஈரான் தேசிய பாதுகாப்பு சபையின் செயலாளர் மொஹ்சென் ரெசாய் எச்சரித்துள்ளார். இந்த நடவடிக்கை அமலுக்கு வந்தால் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதற்கிடையே, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் இறுதியில் அமெரிக்காவையே பூமரங் போல தாக்கும் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபப் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக அமெரிக்க தடைகளை எதிர்கொண்டு வருவதால் புதிய நடவடிக்கைகள் தங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தாது என்றும், அமெரிக்காவின் முயற்சி தோல்வியடையும் என்றும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஈரானிடம் பணமில்லை, படை வலிமையில்லை? அதிபர் டிரம்பின் அதிரடி குற்றச்சாட்டு!