×
 

பிரதமர் மோடிக்கு இரவில் போன் போட்ட ட்ரம்ப்!! 40 நிமிடங்கள் நீடித்த பேச்சு!! மேற்காசிய போர் பதற்றம் எதிரொலி!

மேற்காசியா விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி இருவரும் தொலைபேசியில் 40 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர்.

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே மேற்காசியா விவகாரம் தொடர்பாக 40 நிமிடங்கள் நீடித்த தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போர் தொடங்கிய பிறகு, போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததற்குப் பின்னர் இரு தலைவர்களும் முதன்முறையாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. உலக நாடுகளின் அழுத்தத்தால் இரு வாரங்கள் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. 

இதனிடையே அமெரிக்கா-ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை நம் அண்டை நாடான பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. சுமார் 21 மணி நேரம் நீடித்த இந்தப் பேச்சு எந்த உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி - அதிபர் ட்ரம்ப் ஆலோசனையில் எலான் மஸ்க்!! இஸ்ரேல் - ஈரான் போரில் மிகப்பெரிய ட்விஸ்ட்!

இந்த நிலையில், ஏப்ரல் 14ஆம் தேதி டிரம்ப் மோடியை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். இந்த 40 நிமிட உரையாடலில் மேற்காசிய சூழல், ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து பாதுகாப்பாக வைத்திருப்பதன் முக்கியத்துவம் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. 
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி மற்றும் வர்த்தகத்துக்கு ஹார்முஸ் ஜலசந்தி மிக முக்கியமானது என்பதால், இந்த விவகாரம் இந்தியாவுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

உரையாடலின் போது பிரதமர் மோடி, “இந்திய மக்கள் உங்களை விரும்புகிறார்கள்” என்று டிரம்ப்பிடம் தெரிவித்ததாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் செர்ஜியா கோர் தெரிவித்தார். இரு தலைவர்களும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், வர்த்தக உறவுகள் குறித்தும் பேசினர். இந்த உரையாடல் “மிகவும் நல்லதாகவும் பயனுள்ளதாகவும்” இருந்ததாக அமெரிக்க தூதர் கூறினார்.

இது இரு தலைவர்களுக்கு இடையேயான 2026ஆம் ஆண்டின் மூன்றாவது தொலைபேசி உரையாடல் ஆகும். போர் நிறுத்தத்துக்குப் பின் முதல் முறையாக நடைபெற்ற இந்தப் பேச்சு, பிராந்திய அமைதி மற்றும் உலகளாவிய வர்த்தகப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதாக அரசியல் வட்டாரங்கள் பார்க்கின்றன. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும் அபாயம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை பாதிக்கும் என்பதால், இந்தியா இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இதையும் படிங்க: ஏப்., 7ல் போர் நிறுத்தம்!! பேச்சுவார்த்தைக்கு சம்மதம்!! அமெரிக்க, இஸ்ரேல் போரில் இறங்கி வரும் ஈரான்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share