தென்கொரியாவுக்கு டிரம்ப் திடீர் உத்தரவு! கூட்டு ராணுவப் பயிற்சிகளை குறைக்க அமெரிக்கா முடிவு?
ஈரானை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் முயற்சிகளில் அமெரிக்காவுடன் இணைவதற்கான தனது கோரிக்கையை தென் கொரியா நிராகரித்துவிட்டது; இந்த சூழலில், தென்கொரியாவுடன் கூட்டு ராணுவப் பயிற்சிகளை குறைக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.
அமெரிக்கா மற்றும் தென்கொரியா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பில் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. தென்கொரியாவுடன் நடத்தப்படும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை பெருமளவில் குறைக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தென்கொரியா மறுத்ததன் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா நீண்டகாலமாக தென்கொரியாவுடன் இணைந்து பல்வேறு ராணுவப் பயிற்சிகளை நடத்தி வருகிறது. குறிப்பாக வடகொரியாவின் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, இரு நாடுகளின் படைகளும் இணைந்து மேற்கொள்ளும் பயிற்சிகள் பிராந்திய பாதுகாப்பில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.
இந்த நிலையில், கூட்டு ராணுவப் பயிற்சிகளுக்கான செலவு அதிகமாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த செலவில் கணிசமான பகுதியை அமெரிக்காவே ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தி எங்கள் உத்தரவுக்குத்தான் திறக்கும்! அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு ஈரான் நேரடி பதிலடி
எனவே, தென்கொரியாவுடன் நடத்தப்படும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை பெரிய அளவில் குறைக்குமாறு பாதுகாப்புத் துறைச் செயலாளர் பீட் ஹெக்செத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் தனக்கு சிறந்த உறவு இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த உறவின் அடிப்படையில் பார்க்கும்போது, தென்கொரியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து பெரிய அளவில் கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்வதில் தனக்கு நீண்ட காலமாகவே உடன்பாடு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஈரானின் அணு ஆயுதத் திறனை கட்டுப்படுத்தும் அமெரிக்க முயற்சியில் தென்கொரியாவும் இணைய வேண்டும் என சமீபத்தில் அந்நாட்டு அதிபரிடம் கேட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த கோரிக்கையை தென்கொரியா நிராகரித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த மறுப்பு டிரம்ப் நிர்வாகத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் தொடர்ச்சியாகவே தென்கொரியாவுடனான கூட்டு ராணுவப் பயிற்சிகளை குறைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், இந்த நடவடிக்கை அமெரிக்கா–தென்கொரியா பாதுகாப்பு கூட்டணியில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தற்போது முக்கிய கேள்வியாகியுள்ளது. வடகொரியாவின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வரும் நிலையில், கூட்டு பயிற்சிகள் குறைக்கப்படுவது பிராந்திய பாதுகாப்பு சூழலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “Trump 2028” 3-வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியா? ட்ரம்ப் சூசகம்! அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு!