என்னை எல்லாரும் கைவிட்டுட்டாங்க! நான் ஏமாந்துட்டேன்!! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிருப்தி!
ஈரானுக்கு எதிரான போரின்போது பல நேட்டோ நட்பு நாடுகள் ஆதரவளிக்க தவறி விட்டன. அவர்களது நிலைப்பாட்டால் நான் ஏமாற்றமடைந்தேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான மோதலின் போது அமெரிக்காவுக்கு பல முக்கிய நேட்டோ கூட்டணி நாடுகள் போதிய ஆதரவு வழங்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் தனது ஏமாற்றத்தை வெளிப்படையாக பதிவு செய்துள்ள அவரது கருத்துகள் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவை சந்தித்துப் பேசிய பின்னர் டிரம்ப் இந்த கருத்துகளை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்கா பெரும்பாலும் தனித்தே செயல்பட்டதாகவும், பல கூட்டணி நாடுகள் எதிர்பார்த்த அளவில் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.
“எங்களுக்கு அவர்களின் உதவி அவசியமாக தேவைப்படவில்லை. ஆனால் குறைந்தபட்சம் ஆதரவு தெரிவிக்கக்கூட அவர்கள் முன்வரவில்லை. நாங்கள் முதல் வாரத்திலேயே எங்கள் இலக்குகளை நிறைவேற்றிவிட்டோம். இருந்தாலும் கூட்டணி நாடுகள் நம்முடன் இருப்பதாக கூறியிருந்தால் அது நல்ல செய்தியாக இருந்திருக்கும்” என்று டிரம்ப் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ராணுவ ரீதியாக ஈரான் மொத்தமாக தோற்றுவிட்டது! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சுயதம்பட்டம்!
மேலும், ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் அணுகுமுறை தனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார். சில நாடுகள் பாதுகாப்பு மற்றும் கூட்டணியின் பலன்களை அனுபவிக்க விரும்புகின்றன; ஆனால் அதற்கான பொறுப்புகளை ஏற்க தயங்குகின்றன என்றும் அவர் விமர்சித்தார்.
அதே நேரத்தில், டிரம்பின் குற்றச்சாட்டுகளை நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே மறுத்தார். ஈரான் அணுசக்தி திறனை முழுமையாக அடைந்திருந்தால் அது மத்திய கிழக்கு மட்டுமல்லாமல் உலகளாவிய பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் என்று அவர் கூறினார்.
மேலும், அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு மேற்கத்திய நாடுகள் ஆதரவு அளித்ததாகவும் ரூட்டே வலியுறுத்தினார். ஜி7 நாடுகளின் தலைவர்கள் பலரும் ஈரானின் அணுசக்தி திட்டம் பலவீனப்படுத்தப்பட்டதை வரவேற்றதாகவும், கடந்த சில வாரங்களில் ஐரோப்பிய தளங்களில் இருந்து ஆயிரக்கணக்கான அமெரிக்க விமானங்கள் செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
டிரம்பின் கருத்துகளும், அதற்கு ரூட்டே அளித்த பதிலும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கிடையேயான உறவுகள் குறித்து புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளன.
இதையும் படிங்க: இன்னும் 60 நாள்!! ஹார்முஸை கடக்க கப்பல்களுக்கு எந்த கட்டணம் கிடையாது! அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!