அமைதிக்கான அதிபர்! நோபல் பரிசுக்கு அடிபோடும் ட்ரம்ப்! தனக்கு தானே பட்டம் கொடுத்து சுயதம்பட்டம்!
அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், தன் அமைதி திட்டத்தின் முக்கிய அம்சங்களுக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
வாஷிங்டன்/ஜெருசலேம், அக்டோபர் 10: இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்படுத்தும் ஹமாஸ் இடையே நடந்து வந்த போர், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த 20-புள்ளி அமைதித் திட்டத்தால் முதல் கட்ட முடிவுக்கு வந்துள்ளது.
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்களுக்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, காசாவில் போர் நிறுத்தப்பட்டு, பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர். இந்த முன்னேற்றம், இன்று அறிவிக்கப்படவுள்ள அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்புக்கு முன்னதாக உலக கவனத்தை ஈர்த்துள்ளது.
2023 அக்டோபர் 7-ல் ஹமாஸ் தொடுத்த தாக்குதலால் தொடங்கிய இந்த மோதலில், இஸ்ரேலின் தீவிர குண்டுவீச்சுகளால் காசாவில் சுமார் 70,000 பேர் உயிரிழந்ததாகவும், பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தன.
இதையும் படிங்க: முடிந்தது கெடு! வருமா போர் நிறுத்தம்?! ஹமாஸ் அமைப்பினருடன் இஸ்ரேல் இன்று பேச்சுவார்த்தை!
இதன் ஒரு பகுதியாக, டிரம்ப் முன்மொழிந்த 20-அம்ச அமைதித் திட்டம், உடனடி போர் நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுவிப்பு, மனிதாபிமான உதவிகள் வழங்கல் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஆரம்பத்தில், இஸ்ரேல் இதற்கு ஒப்புதல் அளித்திருந்தாலும், ஹமாஸ் சில அம்சங்கள் குறித்து மேலும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கோரியிருந்தது.
எகிப்தில் நடந்த மூன்றாம் தரப்பு மத்தியஸ்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின், ஹமாஸ் இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு ஒப்புக்கொண்டது. இதன்படி, குறைந்தபட்சம் சில பிணைக்கைதிகள் உடனடியாக விடுவிக்கப்படுவர், மேலும் இஸ்ரேல் தனது படைகளை காசாவிலிருந்து படிப்படியாக திரும்பப் பெறும்.
டிரம்ப் தனது அறிவிப்பில், “விரைவில் அனைத்து பிணைக்கைதிகளும் விடுவிக்கப்படுவர். இது வலுவான, நீடித்த அமைதிக்கு முதல் படியாகும். எல்லோரும் நியாயமாக நடத்தப்படுவர்,” என்று தெரிவித்தார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது சமூக வலைதள பதிவில், “கடவுளின் உதவியுடன், அனைத்து பிணைக்கைதிகளையும் வீடு திரும்பச் செய்வோம்,” என்று உறுதியளித்தார்.
இந்த அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, நெதன்யாகு டிரம்பை தொடர்பு கொண்டு பேசியதாகவும், “என்னால் நம்பவே முடியவில்லை. இப்போது எல்லோரும் இஸ்ரேலையும் என்னையும் விரும்புகின்றனர்,” என்று கூறியதாகவும் டிரம்ப் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம், டிரம்பின் மத்தியஸ்தத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. இவர் ஏற்கனவே இந்தியா-பாகிஸ்தான் உட்பட ஏழு மோதல்களை முடிவுக்கு கொண்டுவந்ததாக கூறி வருகிறார். வெள்ளை மாளிகையும் “அமைதிக்கான அதிபர்” என்று டிரம்பை புகழ்ந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ள நிலையில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. டிரம்பின் இந்த முயற்சி, அவரை நோபல் பரிசுக்கு முன்னிலை வேட்பாளராக மாற்றியுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இந்த முன்னேற்றத்தை வரவேற்று, டிரம்ப் மற்றும் நெதன்யாகுவுடன் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.
“காசாவில் அமைதியை ஏற்படுத்திய டிரம்பின் முயற்சிகளை பாராட்டுகிறேன். பயங்கரவாதத்தை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினோம்,” என்று மோடி தனது அறிக்கையில் கூறினார்.
இந்த ஒப்பந்தத்தை கத்தார், எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள்ளன. ஐ.நா.வும் இதனை “காசா மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் முதல் படி” என பாராட்டியுள்ளது. இருப்பினும், காசாவின் நிர்வாகம் மற்றும் ஹமாஸின் எதிர்காலம் குறித்த கேள்விகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. எகிப்தில் இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
இந்தியாவின் ஆதரவும், டிரம்பின் மத்தியஸ்தமும், உலக அரங்கில் அமைதிக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. காசாவில் நீடித்த அமைதி நிலவும் என உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன.
இதையும் படிங்க: நோபல் பரிசு கொடுத்துருங்க! இல்லைனா அவமானமா போயிடும்! புலம்பும் ட்ரம்ப்!