×
 

'ஆப்ரஹாம் ஒப்பந்தம்' சவுதிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய டிரம்ப்!! நேட்டோவுக்கு எதிர்ப்பு!

சவுதி அரேபியாவை 'நேட்டோ' அல்லாத முக்கிய கூட்டணி நாடு என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஆயுத விற்பனை, அணுசக்தி ஒத்துழைப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானின் அமெரிக்கா பயணத்தை மிகப் பெரிய சிறப்புடன் வரவேற்றார். வெள்ளை மாளிகையில் நடந்த சிறப்பு விருந்திற்குப் பிறகு நடந்த சந்திப்பில், இரு நாடுகளும் பாதுகாப்பு, முதலீடு, அணுசக்தி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இதன் மூலம் அமெரிக்கா-சவுதி உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றதும், டிரம்ப் அவருக்கு சிறப்பு விருந்து அளித்தார். சந்திப்பில் இருவரும் இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து விரிவாகப் பேசினர். முடிவாக, டிரம்ப் சவுதி அரேபியாவை "நேட்டோ அல்லாத முக்கிய கூட்டணி நாடு" என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

நேட்டோ என்பது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான ராணுவ ஒத்துழைப்பு அமைப்பு. இதில் இல்லாத நாடுகளுக்கு இந்த அந்தஸ்தை அமெரிக்கா அளித்தால், அவை அமெரிக்காவின் அதிநவீன ஆயுதங்களை எளிதாக வாங்கலாம், ராணுவப் பயிற்சி, உளவு தகவல் பகிர்வு, கடன் உதவி போன்றவை பெறலாம். ஆனால் நேட்டோ நாடுகளுக்கு இருக்கும் போல் ராணுவ பாதுகாப்பு உத்தரவாதம் இல்லை.

இதையும் படிங்க: படைபலத்தை அதிகரிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் ரூ.822 கோடிக்கு ஆயுதங்கள் வாங்க டீல்!

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, டிரம்ப் சவுதிக்கு 48 F-35 போர் விமானங்கள், 300 ராணுவ பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் விற்பனை செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதோடு அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்கள் சவுதியில் எளிதாக செயல்பட அனுமதிக்கும் வரலாற்று சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தமும் அமலுக்கு வந்தது. 

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்காவில் 88 லட்சம் கோடி ரூபாய் (சுமார் 1 டிரில்லியன் டாலர்) முதலீடு செய்ய உறுதியளித்தார். அதில் F-35 விமானங்களுக்கு மட்டும் 12 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

மேற்காசிய நாடுகளை ஒன்றிணைக்கும் அமெரிக்காவின் 'ஆப்ரஹாம் ஒப்பந்தம்' குறித்தும் இருவரும் பேசினர். இளவரசர் முகமது பின் சல்மான், "பாலஸ்தீன மக்களுக்கு இரு நாடு தீர்வு கிடைத்த பிறகே இந்த ஒப்பந்தத்தில் சவுதி இணைந்துக்கொள்வோம்" என்று தெளிவாகக் கூறினார்.

இந்த ஒப்பந்தங்கள் மேற்காசியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். டிரம்பின் இந்த நகர்வு, சவுதியின் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, அமெரிக்காவின் பிராந்திய செல்வாக்கையும் அதிகரிக்கும்.
 

இதையும் படிங்க: வங்கக்கடலில் அடுத்த புயல் சின்னம்?! ஒருவாரம் அடித்து ஊற்றப்போகும் மழை! 16 மாவட்டங்களுக்கு அலர்ட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share