படைபலத்தை அதிகரிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் ரூ.822 கோடிக்கு ஆயுதங்கள் வாங்க டீல்!
இந்தியாவுக்கு ரூ.822 கோடி மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவும் அமெரிக்காவும் மீண்டும் ஒரு முறை ராணுவத்தில் கைகோர்த்துக் கொள்கின்றன. கடந்த சில மாதங்களாகவே இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவில் சிறு கசப்பு நிலவியது. அதிபர் டிரம்ப் ஆட்சியின் போது விதிக்கப்பட்ட கூடுதல் வரியால் ஏற்பட்ட சலசலப்பு இன்னும் முழுமையாகத் தீரவில்லை என்றாலும், பாதுகாப்பு ஒத்துழைப்பு என்று வந்துவிட்டால் இரு நாடுகளும் ஒருவரையொருவர் மிக எளிதாக நம்புகின்றன என்பதற்கு இன்றைய அறிவிப்பு மற்றொரு உதாரணம்.
ரூ.822 கோடி மதிப்பிலான அதிநவீன ஆயுதங்களை இந்திய ராணுவத்திற்கு விற்பனை செய்ய அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா பெறப்போவது வெறும் ஆயுதங்கள் மட்டுமல்ல, எதிர்கால போர்க்களத்தில் வெற்றியை உறுதி செய்யும் முக்கியமான தொழில்நுட்பங்களும்கூட.
இந்த ஒப்பந்தத்தில் மிக முக்கியமானது 100 எண்ணிக்கையிலான FGM-148 ஜாவெலின் தோள் ஏவுகணைகள். ஒரு ராணுவ வீரர் தன் தோளில் சுமந்து சென்று, நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் டேங்கையோ கவச வாகனத்தையோ துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது இந்த ஏவுகணை. உக்ரைன்-ரஷ்யா போரில் உக்ரைன் ராணுவம் இதைப் பயன்படுத்தி ரஷ்ய டேங்குகளை துவம்சம் செய்து வருவதை உலகமே பார்த்து வருகிறது. இப்போது அதே ஆயுதம் இந்திய ராணுவ வீரர்களின் தோளிலும் ஏற உள்ளது.
இதையும் படிங்க: வங்கக்கடலில் அடுத்த புயல் சின்னம்?! ஒருவாரம் அடித்து ஊற்றப்போகும் மழை! 16 மாவட்டங்களுக்கு அலர்ட்!
இதைத் தவிர 25 இலகு ரக ஏவுகணை ஏவும் அமைப்புகளும், 216 எக்ஸ்கலிபர் அதிநவீன பீரங்கி குண்டுகளும் இந்தியாவுக்கு வந்து சேரும். ஆயுதங்களை மட்டுமல்ல, அவற்றை சோதனை செய்வது, வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது, பழைய ஏவுகணை அமைப்புகளை புதுப்பிப்பது போன்ற சேவைகளையும் அமெரிக்கா வழங்க உள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது: “இந்த ஆயுத விற்பனை இந்தியா-அமெரிக்கா இடையிலான ராஜதந்திர மற்றும் பாதுகாப்பு உறவை மேலும் வலுவாக்கும். இந்திய ராணுவம் தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறன் பல மடங்கு உயரும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நிலைத்து நிற்க இது பெரிதும் உதவும்.”
வர்த்தகத்தில் சிறு மோதல் இருந்தாலும், பாதுகாப்பு ஒத்துழைப்பில் இந்தியாவை அமெரிக்கா எப்போதும் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாகவே பார்க்கிறது என்பதற்கு இந்த ஒப்பந்தம் மற்றொரு சான்று. இந்திய ராணுவத்தின் தரைப்படை திறன் இதன் மூலம் புதிய உயரத்தை எட்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவின் புதிய அத்தியாயம் இது. எல்லையில் பதற்றம் நீடிக்கும் இந்த நேரத்தில் இந்திய வீரர்களின் கைகளில் ஜாவெலின் ஏவுகணை இருப்பது எதிரிகளுக்கு தூக்கத்தைக் கலைக்கும் செய்தியாகவே அமையும்.
இதையும் படிங்க: காலக்கெடு விவகாரம்!! ஜனாதிபதியின் 14 கேள்விகளும்! சுப்ரீம் கோர்ட்டின் பதில்களும்! முழு விவரம்!