போரை நிறுத்துங்க! இல்லையினா ரத்தக்களறி ஆகிரும்! ஹமாஸை எச்சரிக்கும் ட்ரம்ப்!
போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பேச்சை விரைவில் முடிக்குமாறும், இல்லையென்றால் பெரிய அளவில் ரத்தம் சிந்த வேண்டியிருக்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளாக தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த 20 அம்ச அமைதி திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, இரு தரப்பினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை எகிப்தில் தொடங்க உள்ளது.
இதற்கிடையே, பேச்சை விரைவில் முடிக்காவிட்டால் 'மாபெரும் ரத்த களறி' ஏற்படும் என டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் இத்திட்டத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், ஹமாஸ் சில நிபந்தனைகளை மட்டும் ஏற்றுக்கொண்டு, மீதமுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான பேச்சு தேவைப்படும் எனக் கூறியுள்ளது.
2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தாக்குதலில் தொடங்கிய இந்தப் போர், இதுவரை ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் திட்டம், காசாவில் உள்ள 48 இஸ்ரேல் பிணையாளர்களை விடுவிக்கும், பாலஸ்தீன சிறைபிடிக்கப்பட்டோரை விடுதலை செய்யும், ஹமாஸ் ஆயுதங்களை கையளிக்கும், இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தும் என 20 அம்சங்களை உள்ளடக்கியது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதை ஆதரித்துள்ளார்.
இதையும் படிங்க: 72 மணி நேரம் தான் டைம்! ஹமாஸுக்கு ட்ரம்ப் கெடு! போரை நிறுத்த 20 அம்ச திட்டம்!
எகிப்தின் சார்ம் எல்-செய் நகரில் நடைபெற உள்ள இந்த மறைமுக பேச்சுவார்த்தையில், இஸ்ரேல், ஹமாஸ், அமெரிக்க, கத்தார், எகிப்து ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்கோப், டிரம்பின் ஆலோசகரும் மருமகனுமான ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் பங்கேற்கின்றனர். இஸ்ரேல் தரப்பு, உள்நாட்டு அமைச்சர் ரான் டெர்மர் தலைமையில் சென்றுள்ளது.
இந்நிலையில், டிரம்ப் சிஎன்என் நேர்காணலில் கூறியதாவது: "அனைத்து தரப்பினரும் வேகமாக செயல்பட வேண்டும். காலம் மிக முக்கியம். பேச்சு தோல்வியடைந்தால், ஹமாஸ் 'முழுமையான அழிப்பு' (complete obliteration) ஏற்படும். இது யாருக்கும் விருப்பமில்லை. முதல் கட்ட ஒப்பந்தம் இந்த வாரத்துக்குள் முடியும் என நம்புகிறேன்" எனவும், "இல்லையெனில், பெரிய அளவில் ரத்தம் களறி ஏற்படும்" எனவும் எச்சரித்தார். இருப்பினும், காசாவில் இஸ்ரேல் தாக்குதல்கள் தொடர்கின்றன.
இந்தப் பேச்சுவார்த்தை, போரை முடிவுக்கு கொண்டு வரும் சிறந்த வாய்ப்பாகக் கருதப்படுகிறது. ஹமாஸ் தனது ஆயுதங்களை ஒப்படைப்பதில் தயக்கம் காட்டி வருவதால், பேச்சு வார்த்தை சவாலாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நீண்டகால அமைதிக்கு இது முதல் படி என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காசா போரை எப்படி நிப்பாட்டுறது! பாக்., அரபு தலைவர்களுடன் ட்ரம்ப் ஆலோசனை!