600 ட்ரோன் தாக்குதல்! ஆடிப்போனது ரஷ்யா!! இதுவரையில் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது உக்ரைன்!
போர் துவங்கியதில் இருந்து இதுவரை இல்லாத வகையில், மிகப்பெரிய, ‘ட்ரோன்’ தாக்குதலை ரஷ்யா மீது உக்ரைன் நடத்தி உள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதுடன், சர்வதேச அரசியல் வட்டாரங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ரஷ்யா மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியா உள்ளிட்ட முக்கிய பகுதிகளை இலக்காக வைத்து, 600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
போர் தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலாக இது கருதப்படுகிறது. எனினும், பெரும்பாலான ட்ரோன்களை தங்களின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துவிட்டதாக ரஷ்யா கூறியுள்ளது.
இதையும் படிங்க: 70க்கும் மேற்பட்ட ஏவுகணைகள்!! 650 ட்ரோன்கள்!! உக்ரைனை உருக்குலைத்த ரஷ்யா!! 22 பேர் பலி!
இதற்கு பதிலடியாக ரஷ்யாவும் உக்ரைன் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ரஷ்யா ஏவிய 189 ட்ரோன்களில் 174 ட்ரோன்களை தங்களின் வான் பாதுகாப்பு படைகள் சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைன் கூறியுள்ளது.
அதேநேரத்தில், ரஷ்யா ஏவிய ‘இஸ்கந்தர்–எம்’ பாலிஸ்டிக் ஏவுகணைகளில் நான்கு ஏவுகணைகள் உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகளை மீறி இலக்குகளைத் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலால் பல பகுதிகளில் சேதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், பாதிப்பு குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
கடந்த சில மாதங்களாக இரு தரப்பும் ட்ரோன் தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன. இதனால் பாரம்பரிய போர் முறைகளை விட ட்ரோன் தாக்குதல்கள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. இரு நாடுகளும் தொடர்ந்து மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வரும் அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. சமீபத்திய தாக்குதல்கள் ரஷ்யா – உக்ரைன் போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதுடன், சர்வதேச சமூகத்திலும் புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரஷ்யாவின் இதயத்தை கிழித்த உக்ரைன்... சீறிப்பாய்ந்து வந்த 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்... அலறிய மாஸ்கோ...!