×
 

பொறுமையா போங்க, பேரழிவு ஏற்படும்..! இந்தியா, பாக்.-ஐ பதற்றத்தை தணிக்க ஐ.நா. வேண்டுகோள்..!

இந்தியாவும், பாகிஸ்தானும் பதற்றத்தைக் குறைத்து, பொறுமையாக இருக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டால் பேரழிவு விளைவுகள் உருவாகும் என ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த 22ம் தேதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இந்தியா தயாராகி வருகிறது. இந்தியாவில் இருந்த பாகிஸ்தானியர்கள் அனைவரையும் மத்திய அரசு வெளியேற்றிவிட்டது, எல்லைகளை மூடி சீல் வைத்துள்ளது, சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது, தூதரக உறவுகளையும் முறித்துவிட்டது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மத்திய அரசு முப்படை தளபதிகளுடனும், பாதுகாப்பு தலைமை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறது. பிரதமர் மோடியின் இல்லத்தில் இன்று காலையில் இருந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

இதையும் படிங்க: பக்கா ப்ளானிங்.. மோடியின் திட்டத்தால் அலறும் நாடுகள்.. பாகிஸ்தானின் முதுகில் குத்திய சீனா..!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக முப்படைகளும் சுதந்திரமாக முடிவு எடுக்கவும் மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதனால் பாகிஸ்தான் மீது அடுத்த 36 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானலும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தலாம் எனத் தெரிகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் மேகங்கள் சூழ்ந்து பதற்றம் காணப்படுகிறது.

இந்நிலையில் ஐ.நா. பொதுசெயலாளர் அன்டோனியோ கெட்டர்ஸ், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொலைப்பேசியில் பேசியுள்ளார். அதில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஐ.நா. பொதுச்செயலாளர், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இரு நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றமான சூழல் மேலும் வலுவடைந்து போராக மாறக்கூடாது. அவ்வாறு போர் ஏற்பட்டால் பிராந்தியத்தில் பேரழிவான விளைவுகளை ஏற்படுத்தும், பொறுமையாக இருக்க வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.நா. பொதுசெயலாளரின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபானே துஜாரிக் கூறுகையில் “பாகிஸ்தான் பிரதமர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் ஐ.நா. பொதுச்செயலாளர் தனித்தனியே தொலைப்பேசியில் பேசினார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்த ஐ.நா. பொதுச்செயலாளர், நீதி கிடைப்பதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதும் அவசியம் எனத் தெரிவித்தார்.

இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றம் குறித்து ஐ.நா பொதுச்செயலாளர் கவலைதெரிவித்துள்ளார். இரு நாடுகளும் மோதல் போக்கை கைவிட வேண்டும், இது பேரழிவான விளைவுகளை ஏற்படுத்தும். இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தைத் தணிக்க ஐ.நா. எந்த நேரத்திலும் உதவும். இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால் இந்த உலகமும், ஆசியப் பிராந்தியமும் தாங்கிக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்தார்.
 

இதையும் படிங்க: ராணுவத்துக்கு 9 மடங்கு அதிகம் செலவிடும் இந்தியா.. பாக்.-ஐ எச்சரித்த ஸ்வீடன் நிறுவனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share