உலகளாவிய வரி சட்டவிரோதம்! 10% வரி செல்லாது! அதிபர் ட்ரம்புக்கு அமெரிக்க நீதிமன்றம் குட்டு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்த உலகளாவிய 10 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் செல்லாது என அறிவித்துள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்த உலகளாவிய 10 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் செல்லாது என அறிவித்துள்ளது. இந்த தீர்ப்பு டிரம்பின் வர்த்தக கொள்கைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரியில் டிரம்ப் நிர்வாகம், அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறையை சரி செய்யும் வகையில் உலகம் முழுவதிலும் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு 10 சதவீத வரி விதித்தது. 1974-ம் ஆண்டு வர்த்தக சட்டத்தின் பிரிவு 122-ஐ பயன்படுத்தி இந்த வரியை அமல்படுத்தியது. ஆனால், இந்த வரி சட்டவிரோதமானது என சிறு வியாபாரிகள் மற்றும் சில மாநிலங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.
நியூயார்க்கில் உள்ள அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு, 2-க்கு-1 என்ற பெரும்பான்மை தீர்ப்பில், “டிரம்ப் நிர்வாகம் வரியை விதிப்பதற்கான சட்டப்பூர்வ அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது” என தெரிவித்தது. வர்த்தக பற்றாக்குறையை சரி செய்யும் பெயரில் உலகளாவிய அளவில் வரி விதிப்பது சட்டத்துக்கு உட்பட்டதல்ல என நீதிமன்றம் கூறியுள்ளது.
இதையும் படிங்க: தமிழக அரசியலில் மெகா திருப்பம்...!! - இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு... தம்பிதுரை கொடுத்த அடிதூள் அப்டேட்...!
இந்த தீர்ப்பு முழுமையான தடை அல்ல. சில சிறு வியாபாரிகள் மற்றும் வாஷிங்டன் மாநிலத்துக்கு மட்டும் வரி விதிப்பை தடை செய்துள்ளது. மற்ற இறக்குமதியாளர்களுக்கு வரி தொடரும் என்பதால், டிரம்ப் நிர்வாகம் மேல் முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது. இருப்பினும், இந்த தீர்ப்பு டிரம்பின் வர்த்தக போருக்கு முக்கிய சட்டரீதியான தோல்வியாக பார்க்கப்படுகிறது.
முன்பு உச்சநீதிமன்றம் டிரம்பின் சில வரி கொள்கைகளை ரத்து செய்த நிலையில், புதிய 10% வரியும் இப்போது சவாலுக்கு உள்ளாகியுள்ளது. உலகளாவிய வர்த்தகத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை பாதிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
டிரம்ப் நிர்வாகம் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது அரசியல் மற்றும் வர்த்தக வட்டாரங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளும் இந்த வளர்ச்சியை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இதையும் படிங்க: ஐ.டி நிறுவனத்தில் அரங்கேறிய மதமாற்றம், பாலியல் அத்துமீறல்!! 25 நாட்களாக தலைமறைவாக இருந்த கும்பல் தலைவி கைது!