ஈரான் வெடிமருந்து கிடங்கு சர்வநாசம்!! பங்கர் பஸ்டர் போட்ட அமெரிக்கா! அதிகாலையிலேயே அதிரடி!
ஈரானை ஒருபோதும் அணு ஆயுதம் தயாரிக்க அனுமதிக்க மாட்டோம் என கூறி, கடந்த மாதம் 28ம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
தெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப்படைகள் நடத்தி வரும் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் முக்கிய நகரமான இஸ்ஃபஹானில் உள்ள பெரிய வெடிமருந்து கிடங்கு மீது அமெரிக்கா இன்று அதிகாலை பலத்த தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தானே சமூக வலைதளத்தில் தாக்குதல் வீடியோவை பகிர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த மாதம் 28ம் தேதி முதல் “ஈரான் ஒருபோதும் அணு ஆயுதம் தயாரிக்க அனுமதிக்க மாட்டோம்” என்று அமெரிக்கா-இஸ்ரேல் அறிவித்தபடி தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. ஈரான் பதிலடியாக மேற்காசியாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளின் இலக்குகளைத் தாக்கி வருகிறது.
போர் தொடங்கிய முதல் நாளிலேயே ஈரான், உலகின் மிக முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழியான ஹார்முஸ் ஜலசந்தியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அந்த வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடும் ஏற்பட்டது.
இதையும் படிங்க: 'பங்கர் பஸ்டர்' குண்டுகள்!! ஈரான் ஏவுகணை தளம் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல்!
இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை விரைவில் திறக்காவிட்டால், ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு, அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவத் தளங்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அந்த எச்சரிக்கைக்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு, இன்று அதிகாலை அமெரிக்காவின் B2 ஸ்டெல்த் போர் விமானம் மூலம் இஸ்ஃபஹான் வெடிமருந்து கிடங்கு மீது 907 கிலோ எடையுள்ள ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
பங்கர் பஸ்டர் குண்டுகள் பூமிக்கடியில் 20 அடி முதல் 200 அடி ஆழம் வரை துளைத்துச் சென்று வெடிக்கும் திறன் கொண்டவை. இந்தத் தாக்குதலில் வெடிமருந்து கிடங்கு முற்றிலும் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட பெரும் தீயின் வீடியோவை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இஸ்ஃபஹான் ஈரானின் மிக முக்கிய நகரங்களில் ஒன்று. இங்குதான் அணுசக்தி நிலையங்கள், ராணுவ உள்கட்டமைப்பு, ஆயுதத் தொழிற்சாலைகள், விமான உற்பத்தி மற்றும் ஹெலிகாப்டர் பராமரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ளன. கடந்த ஆண்டு இதே நகரில் உள்ள அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புதிய தாக்குதல் ஈரான்-அமெரிக்கா இடையிலான போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வர ஒப்பந்தம் விரைவில் எட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ஈரானின் புதிய தலைவர் உயிரோட இருக்காரா? அதிபர் ட்ரம்ப் எழுப்பிய சந்தேகம்! ஈரான் பதில் கடிதம்!