ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகை தடை: அதிபர் ட்ரம்ப் உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்!
சிஎன்என், பொலிடிகோ உள்ளிட்ட ஊடகங்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைய அதிபர் ட்ரம்ப் விதித்த தடையை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகைக்குள் சிஎன்என், எம்எஸ் நவ் மற்றும் பொலிடிகோ ஆகிய முன்னணி சர்வதேச செய்தி நிறுவனங்களின் செய்தியாளர்கள் நுழைந்து செய்தி சேகரிக்கத் தடை விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த எதேச்சதிகார உத்தரவு அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது எனத் தீர்ப்பளித்த வாஷிங்டன் கூட்டாட்சி நீதிமன்றம், அந்த அடாவடித் தடையை உடனடியாகத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து, பறிக்கப்பட்ட செய்தியாளர்களின் அடையாள அட்டைகளை உடனடியாகத் திரும்ப வழங்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சிஎன்என், எம்எஸ் நவ் மற்றும் பொலிடிகோ ஆகிய ஊடகங்கள் தனது நிர்வாகத்திற்கு எதிராகத் தொடர்ச்சியாக போலிச் செய்திகளை பரப்புவதாகவும், புனைவுகளையும் பொய்களையும் எழுதுவதாகவும் குற்றம்சாட்டி, அந்த ஊடகங்களின் செய்தியாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைய உடனடியாகத் தடை விதிப்பதாக ஒருதலைப்பட்சமாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, செய்தி சேகரிக்க வந்த மூத்த செய்தியாளர்களின் வெள்ளை மாளிகை நுழைவு அட்டைகளை அதிபர் பாதுகாப்புப் பிரிவினர் அதிரடியாகப் பறிமுதல் செய்து அவர்களை வெளியேற்றினர். அதிபர் ட்ரம்பின் இந்த அப்பட்டமான பத்திரிகை சுதந்திரப் பறிப்பு நடவடிக்கைக்கு எதிராக உலகளாவிய அளவில் பத்திரிகையாளர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், பாதிக்கப்பட்ட மூன்று செய்தி நிறுவனங்களும் அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தச் சட்டம் மற்றும் சட்ட நடைமுறைகளைச் சுட்டிக்காட்டி வாஷிங்டன் டிசி கூட்டாட்சி நீதிமன்றத்தில் அவசர வழக்குத் தொடர்ந்தன.
இவ்வழக்கை விசாரித்த கொலம்பியா மாவட்ட கூட்டாட்சி நீதிபதி திமோதி கெல்லி, அதிபர் நிர்வாகத்தின் போக்கிற்கு மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தார். அமெரிக்க நீதித்துறை சார்பில், தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது' என்றும், வெள்ளை மாளிகை அனுமதி என்பது ஒரு சிறப்புரிமையே தவிர உரிமை அல்ல என்றும் முன்வைக்கப்பட்ட வாதங்களை நீதிபதி அடியோடு நிராகரித்தார். அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை எவ்வித முன்னறிவிப்போ, உரிய சட்ட விளக்க நடைமுறைகளோ இன்றி தன்னிச்சையாகப் பறிக்க எந்தவொரு நிர்வாகத்திற்கும் அதிகாரம் கிடையாது. ஒரு ஊடகத்தின் தலையங்கப் பார்வை அல்லது அரசு மீதான விமர்சனங்களின் அடிப்படையில் பழிவாங்கும் நோக்கில் செய்தியாளர்களின் உரிமைகளைப் பறிப்பது அரசியலமைப்புக்கு முற்றிலும் விரோதமானது என்று நீதிபதி திட்டவட்டமாகச் சாட்டையடி கொடுத்தார்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்..!! பிரம்மாண்ட வரவேற்புடன் தொடங்கிய உயர்மட்ட பயணம்!! அசத்திய டிரம்ப்!!
மேலும், ட்ரம்பின் தடை உத்தரவை 14 நாட்களுக்கு உடனடியாக முடக்கிய நீதிபதி, சம்பந்தப்பட்ட மூன்று ஊடகங்களின் செய்தியாளர்களுக்கும் வெள்ளை மாளிகைக்குள் சென்று எவ்விதத் தடையுமின்றிச் செய்தி சேகரிப்பதற்கான அனைத்து அனுமதிகளையும் ஆவணங்களையும் உடனே மீட்டெடுத்து வழங்க வேண்டும் என்று ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அவசர உத்தரவு பிறப்பித்தார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன் முதல் பதவிக்காலத்தில் நியமித்த நீதிபதியே அவரது தன்னிச்சையான உத்தரவைக் கிழித்தெறிந்து தீர்ப்பளித்துள்ளது, சர்வதேச அளவில் பத்திரிகை சுதந்திரத்தின் மகத்தான வெற்றியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஜி20 உச்சி மாநாடு.. அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி..!! டிரம்பை சந்திக்க திட்டம்!!