×
 

அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம் கானல்நீர்?!! நம்பிக்கை இழந்த உலக நாடுகள்!! நீடிக்கும் முரண்பாடு!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போருக்கு விரைவாக தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கைகளை இரு தரப்பின் செயல்பாடுகள் குறைத்துக் கொண்டே வருகின்றன.

அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதலுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இரு தரப்பின் செயல்பாடுகளும் அமைதி முயற்சிகளுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளன.

மேற்காசியாவில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலுக்குப் பிறகு தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் பிற முக்கிய பிரச்னைகளை விவாதிக்க முதல் கட்டப் பேச்சு நடைபெற்றது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இருப்பினும் அடுத்த கட்டப் பேச்சுக்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சில நாட்களுக்கு முன்பு வரை அமைதி ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்ற எதிர்பார்ப்பு உலக அளவில் உயர்ந்திருந்தது. ஆனால் தற்போது இரு தரப்பின் அறிக்கைகளும் அந்த நம்பிக்கையை பெரிதும் குறைத்துள்ளன.

இதையும் படிங்க: முதல்ல போரை நிறுத்துங்க!! ஹார்முஸை திறக்கலாம்!! அப்புறம் அணுசக்தி பற்றி பேசலாம்!! ஈரான் கறார்!!

புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, “ஈரானுடன் நல்ல உடன்பாட்டை எட்ட அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் அது சாத்தியமாகவில்லையென்றால் வேறு வழிகளில் இந்த விவகாரத்தை கையாள வேண்டியிருக்கும்” என்று எச்சரிக்கும் வகையில் தெரிவித்தார். இந்தப் பேச்சு அமைதிப் பேச்சுகளுக்கு முட்டுக்கட்டை போடுவதாகப் பார்க்கப்படுகிறது.

அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், ஈரானுடன் ஒப்பந்தம் செய்வதில் அவசரப்பட வேண்டாம் என்று தன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். தகுந்த நேரம் எடுத்துக்கொண்டு, சரியான முறையில் ஒப்பந்தத்தை வடிவமைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஈரான் தரப்பிலும் ஏமாற்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகேய், “பல தலைப்புகளில் பேச்சுகள் நடைபெற்று சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் இது ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிலைக்கு வந்துவிட்டது என்று அர்த்தம் அல்ல” என்று தெளிவுபடுத்தினார். 

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் மற்றும் போர் நிறுத்தம் தொடர்பான விவகாரங்களில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தப்படுவதாகவும், சர்ச்சைக்குரிய அணுசக்தி பிரச்னைகள் இன்னும் விவாதிக்கப்படவில்லை என்றும் ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த முரண்பாடுகள் தொடரும் நிலையில், நிரந்தர அமைதி ஒப்பந்தம் விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. உலகப் பொருளாதாரம், குறிப்பாக எண்ணெய் விலை மற்றும் கப்பல் போக்குவரத்து மீது இந்த நிலை தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. அடுத்த சில நாட்களில் நடக்கவிருக்கும் பேச்சுகளின் முடிவுகள் மீது உலக நாடுகள் உற்று நோக்கியுள்ளன.

இதையும் படிங்க: அமெரிக்காவின் கண்டிசனை ஏற்கவிட்டால்..?! ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை! போர் பதற்றம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share