கடன் சுமையில் அமெரிக்கா! வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த பொதுக்கடன்… டிரம்புக்கு புதிய சிக்கல்!
அமெரிக்காவின் தேசியப் பொதுக்கடன், 3,840 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
அமெரிக்காவின் தேசியப் பொதுக்கடன் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க கருவூலத்துறையின் சமீபத்திய நிதி அறிக்கையின்படி, அந்நாட்டின் மொத்த பொதுக்கடன் ரூ.3,840 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றான அமெரிக்காவுக்கு கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து வருவது பொருளாதார வட்டாரங்களில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க கருவூலத்துறை வழக்கமாக ஒவ்வொரு வர்த்தக நாளின் முடிவிலும் அந்நாட்டின் நிதி நிலவரம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த 18-ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் அமெரிக்காவின் கடன் தொகை புதிய உச்சத்தை எட்டியிருப்பது தெரியவந்துள்ளது.
இதற்கு முன்பு, 2026-ம் நிதியாண்டின் முடிவில் அமெரிக்காவின் தேசியக் கடன் சுமார் ரூ.3,773 லட்சம் கோடியாக இருக்கும் என காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம் கணித்திருந்தது. ஆனால் அந்த கணிப்பை விட கடன் வேகமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, நிதியாண்டு தொடங்கி எட்டு மாதங்களிலேயே கடன் தொகை ரூ.3,840 லட்சம் கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்!” டிரம்பின் புதிய தடைகளுக்கு ஈரான் கடும் பதிலடி! வெடித்தது புதிய சர்ச்சை
அமெரிக்காவின் கடன் உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேற்காசியாவில் நீடிக்கும் போர் மற்றும் பதற்றமான சூழல் காரணமாக பாதுகாப்பு மற்றும் ராணுவச் செலவுகள் அதிகரித்திருப்பதும் இதில் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அதேபோல், சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்களுக்கான செலவுகள் அதிகரித்துள்ளன. பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்காவில் நீண்ட காலமாக உயர்ந்த வட்டி விகிதங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், அரசின் கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டிச் செலவும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதுவும் மொத்த கடன் சுமை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
தேர்தல் பிரசாரத்தின்போது அரசு செலவினங்களை கட்டுப்படுத்தி நாட்டின் நிதிச்சுமையை குறைப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதியளித்திருந்தார். ஆனால் தற்போது பொதுக்கடன் புதிய உச்சத்தை எட்டியிருப்பதை சுட்டிக்காட்டி, அவரது நிர்வாகத்தின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
எனினும், அமெரிக்காவின் கடன் உயர்வை ஒரே ஒரு காரணத்துடன் இணைத்துப் பார்க்க முடியாது. அரசின் வருவாய், செலவினம், வட்டி விகிதம், ராணுவ செலவுகள் மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கான நிதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் ஒட்டுமொத்த விளைவாகவே கடன் அதிகரித்து வருகிறது.
உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா வகிக்கும் முக்கிய பங்கைக் கருத்தில் கொள்ளும்போது, அந்நாட்டின் கடன் தொடர்ந்து அதிகரிப்பது சர்வதேச நிதிச் சந்தைகளிலும் கவனிக்கப்படும் முக்கிய விவகாரமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: தென்கொரியாவுக்கு டிரம்ப் திடீர் உத்தரவு! கூட்டு ராணுவப் பயிற்சிகளை குறைக்க அமெரிக்கா முடிவு?