சவுதியில் அடுத்தடுத்து ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்! மத்திய கிழக்கில் நிலைமை மோசமாகலாம்- அமெரிக்கா வார்னிங்!
சமீபத்தில் ரியாத் நகரை நோக்கி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹவுதி அமைப்பு தெரிவித்தது.
சவுதி அரேபியாவில் ஹவுதி அமைப்பினரின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்களுக்கு அமெரிக்க அரசு புதிய பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், அமெரிக்கர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள பயண எச்சரிக்கையில், சவுதி அரேபியாவுக்கு தற்போது ‘Level 3 – Reconsider Travel’ என்ற எச்சரிக்கை நிலை அமலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் சார்ந்த ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள், ஆயுத மோதல் உள்ளிட்ட பாதுகாப்பு அபாயங்களை கருத்தில் கொண்டு, சவுதி அரேபியாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்கர்களிடம் கூறப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் பாதுகாப்பு சூழல் சிக்கலான நிலையில் இருப்பதாகவும், எதிர்பாராத வகையில் நிலைமை வேகமாக மோசமடைய வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இதனால் விமானங்கள் ரத்து செய்யப்படுவது, வான்வெளி மூடப்படுவது மற்றும் பயணங்களில் திடீர் இடையூறுகள் ஏற்படுவது போன்ற சூழல்கள் உருவாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மெக்காவை குறிவைத்த ஹவுதிகள்? பரபரப்பை கிளப்பிய ட்ரோன் தாக்குதல்! நடுவானில் சுட்டுவீழ்த்திய சவுதி பாதுகாப்புப் படை!
சமீபத்தில் ரியாத் நகரை நோக்கி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹவுதி அமைப்பு தெரிவித்தது. சவுதி பாதுகாப்புப் படைகள் ஏவுகணையை இடைமறித்ததாக கூறியுள்ளன. இதனிடையே, ரியாத் விமான நிலையத்தைச் சுற்றிய பகுதிகளில் வெடிப்பு மற்றும் புகை காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
மேலும், மக்கா அருகே ஹவுதி ட்ரோன் ஒன்று இடைமறிக்கப்பட்டதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அந்தக் கூற்றை ஹவுதி தரப்பு மறுத்திருந்தது. இதனால் சவுதி அரேபியாவின் பாதுகாப்பு நிலை குறித்து பிராந்திய அளவில் கவலை அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்குக்கு வெளியே உள்ள அமெரிக்கர்களும் அப்பகுதிக்கு செல்வது அல்லது அதன் வழியாக பயணம் செய்வது குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அப்பகுதியில் இருப்பவர்கள் உள்ளூர் பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும் விமான நிறுவனங்களின் செயல்பாட்டு தகவல்களையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: செங்கடலில் உச்சகட்ட பரபரப்பு.. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் துறைமுக நகரம்..!!