நாங்க மட்டுமே வரி விதிப்போம்!! எங்களுக்கு யாரும் வரி விதிக்க கூடாது! அமெரிக்க அமைச்சர் அடாவடி!
கிரீன்லாந்து தொடர்பான விவகாரத்தில் அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் எந்தவொரு பதிலடியும் கொடுக்க வேண்டாம் என்றும், அது புத்திசாலித்தனமானதல்ல என்றும் அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை கையகப்படுத்தும் முயற்சியை தீவிரப்படுத்தி வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் (Scott Bessent) ஐரோப்பிய யூனியனுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் எந்த பதிலடியும் கொடுக்க வேண்டாம் என்றும், அது புத்திசாலித்தனமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டில் பேசிய அவர் கூறியதாவது: "கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பது நில விரிவாக்கம் அல்ல. அது சீனாவின் ஆர்ட்டிக் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும், அமெரிக்காவின் வடக்கு பகுதியை பாதுகாப்பதற்கும் எடுக்கப்படும் மிக முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கை.
இதையும் படிங்க: ட்ரம்ப் சென்ற விமானத்தில் நடுவானில் கோளாறு!! அனைவரையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்!! அதிபர் போட்ட ட்வீட்!
ஐரோப்பிய யூனியன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்தால், அமெரிக்கா இன்னும் கடுமையான வரிகளை விதிக்கும். இது வர்த்தகப் போரை தொடங்குவதற்கு சமம். ஐரோப்பிய நாடுகள் இத்தகைய பதிலடியை கொடுப்பது மிகவும் விவேகமற்றது; புத்திசாலித்தனமற்றது."
அமெரிக்கா கிரீன்லாந்து மீது வர்த்தக வரி அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், ஐரோப்பிய யூனியன் அதற்கு பதிலடி கொடுக்க ஆலோசனை நடத்தி வருகிறது. ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் உட்பட பல தலைவர்கள் "அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுப்போம்" என்று கூறி வருகின்றனர். ஆனால் ஸ்காட் பெசன்ட் இதை "தவறான முடிவு" என்று கண்டித்துள்ளார்.
கிரீன்லாந்து டென்மார்க்கின் தன்னாட்சி பகுதியாக இருந்தாலும், ஆர்ட்டிக் பெருங்கடல் பகுதியில் மூலோபாய ரீதியாக மிக முக்கிய இடத்தில் உள்ளது. சீனாவின் ஆர்ட்டிக் ஆதிக்கத்தை தடுக்கவும், அமெரிக்காவின் வடக்கு எல்லையை பாதுகாக்கவும் கிரீன்லாந்து அவசியம் என்று டிரம்ப் அரசு வலியுறுத்தி வருகிறது. டிரம்ப் சமீபத்தில் கிரீன்லாந்து தீவில் அமெரிக்க கொடியுடன் நிற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் ஐரோப்பிய யூனியன் நாடுகள் "சர்வதேச சட்டத்தை மீறும் முயற்சி" என்று கண்டனம் தெரிவித்து வருகின்றன. டென்மார்க் தனது ராணுவ இருப்பை கிரீன்லாந்தில் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு பதிலடி வரி விதித்தால், அமெரிக்கா இன்னும் கடுமையான வரிகளை விதிக்கும் என்று ஸ்காட் பெசன்ட் எச்சரித்துள்ளார். இது அமெரிக்கா-ஐரோப்பா இடையேயான வர்த்தகப் போரை மீண்டும் தூண்டும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
டாவோஸ் மாநாட்டில் இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா-சீனா-ஐரோப்பா மூன்று துருவங்களாக மாறி வரும் நிலையில், கிரீன்லாந்து விவகாரம் புதிய பதட்டத்தை உருவாக்கியுள்ளது. ஐரோப்பிய யூனியன் பதிலடி கொடுக்குமா? அல்லது டிரம்ப் அச்சுறுத்தலுக்கு அடங்குமா? என்ற எதிர்பார்ப்பு உலக அரங்கில் உச்சத்தில் உள்ளது.
இதையும் படிங்க: பேசிப்பாப்போம்! செட் ஆகலைனா அவ்ளோதான்! கிரின்லாந்தை மிரட்டும் ட்ரம்ப்!!