கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்த பஸ்!! பாறையில் உருண்டு விழுந்ததில் 15 பேர் பரிதாப பலி!!
இன்று காலை பேருந்து ஒன்று மலைப்பாதையில் இருந்து உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் ராம்நகர் பகுதியில் உள்ள ககோர் கிராமத்துக்கு அருகே இன்று காலை ஏற்பட்ட பயங்கர பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து மலைப்பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவில் (blind curve) நிகழ்ந்துள்ளது.
காலை சுமார் 10 மணி அளவில், பயணிகள் நிறைந்த பேருந்து ஒன்று வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து உருண்டு சுமார் 100 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது. பேருந்து பல முறை உருண்டு இடிபாடுகளாக மாறிய காட்சி பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
விபத்து நடந்த உடனேயே அருகில் உள்ள கிராம மக்கள் ஓடிவந்து மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை கைகளால் தூக்கி மீட்டனர்.
இதையும் படிங்க: பழிக்கு பழி!! அமெரிக்க ராணுவ கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்! மூளும் போர்?!
பின்னர் போலீசார், மீட்புக் குழுவினர் மற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியை தீவிரப்படுத்தினர். காயமடைந்த 20 பேரையும் உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. உயிரிழந்த 15 பேரின் உடல்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இந்த கோர விபத்து குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உடனடியாக உதம்பூர் துணை ஆட்சியர் மிங்கா ஷெர்பாவுடன் தொலைபேசியில் பேசி நிலைமையை கேட்டறிந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
விபத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. மலைப் பாதைகளில் வாகனங்கள் அதிவேகத்தில் செல்வது, சாலை நிலைமை மற்றும் டிரைவரின் கவனக்குறைவு உள்ளிட்ட காரணங்கள் ஆராயப்படுகின்றன.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் மலைச் சாலைகள் சிக்கலானவை என்பதால், இத்தகைய விபத்துகள் அடிக்கடி நிகழ்வது வழக்கம். உள்ளூர் மக்கள் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சோக சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஈரான் கொடியுடன் சென்ற டூஸ்கா கப்பல் சிறைபிடிப்பு!! ஆட்டத்தை ஆரம்பித்தது அமெரிக்கா! நீடிக்கும் பதற்றம்!